ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி மழையால் ரத்தானதால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்றிருந்த இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில், இறுதி போட்டி இன்று மெல்பர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடுகிறது. முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, முதல் முறையாக டி20 கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்த உலக கோப்பையின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி, அதே நம்பிக்கையுடன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா செம ஃபார்மில் அருமையாக ஆடி ஸ்கோர் செய்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். பேட்டிங்கில் அவர் இந்திய அணியின் நம்பிக்கையாக திகழ்கிறார். பவுலிங்கில் பூனம் யாதவ், ஷிகா பாண்டே, ராதா யாதவ் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர். 

லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பூனம் யாதவின் பவுலிங் தான், இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தது. எனவே இந்திய அணி முழு நம்பிக்கையுடன் இறங்கியுள்ளது. மகளிர் தினமான இன்று, இந்திய மகளிர் அணி டி20 உலக கோப்பையை முதல் முறையாக தூக்க வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.