கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 3-2 என வென்று அசத்தியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 272 ரன்களை அடித்தது. உஸ்மான் கவாஜா அபாரமாக ஆடி இந்த போட்டியிலும் சதமடித்தார். இந்தியாவுக்கு எதிராக தனது இரண்டாவது சதத்தை அடித்தார். ஹேண்ட்ஸ்கம்ப் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைந்தது. டெத் ஓவர்களில் ரிச்சர்ட்ஸனும் கம்மின்ஸும் ஒருசில பவுண்டரிகளை அடித்து 272 ரன்களை எட்ட உதவினர்.

273 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப் நிலைக்கவில்லை. விராட் கோலியை 20 ரன்களில் ஸ்டோய்னிஸ் வீழ்த்தினார். அதன்பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவருமே தங்களது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இருவருமே தலா 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் அரைசதம் அடித்த ரோஹித் சர்மாவும் 56 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் திரும்பியது. ஜடேஜா டக் அவுட்டானாலும், கேதர் ஜாதவுடன் புவனேஷ்வர் குமார் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினார். இருவரும் சிறப்பாக ஆடினர். 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 91 ரன்களை குவித்தனர். 46 ரன்களில் ஆட்டமிழந்து புவனேஷ்வர் குமார் அரைசதத்தை தவறவிட்டார். புவனேஷ்வர் குமார் அவுட்டானதும் நெருக்கடி அதிகரித்தது. கேதர் ஜாதவும் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 3-2 என ஒருநாள் தொடரை வென்றது. 2015ம் ஆண்டுக்கு பிறகு சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணியை, இந்திய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்று பழிக்கு பழி வாங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி.