இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் எந்த பேட்ஸ்மேனும் முதல் இன்னிங்ஸில் சோபிக்காத நிலையில், ஸ்மித் தனி ஒரு ஆளாக நின்று பொறுப்புடன் ஆடி சதமடித்து ஆஸ்திரேலிய அணியை காப்பாற்றினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அடித்த 284 ரன்களில் 144 ரன்கள் ஸ்மித் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 374 ரன்களை குவித்தது. 90 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியை மீண்டும் தூக்கி நிறுத்தினார் ஸ்மித். ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் அடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்களை குவித்தார். 

இந்த இன்னிங்ஸில் மேத்யூ வேட் களமிறங்கியது முதலே அடித்து ஆடி ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்ததற்கு மேத்யூ வேட் தான் காரணம். 143 பந்துகளில் 110 ரன்களை குவித்தார் வேட். இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. 

398 ரன்கள் என்ற கடின இலக்குடன் நான்காம் நாள் ஆட்டம் முடிய கொஞ்ச நேரத்திற்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 385 ரன்கள் தேவை. 

கடைசி நாளில் இதெல்லாம் அடிக்க சாத்தியமே இல்லாத ஸ்கோர். அதேநேரத்தில் 90 ஓவர்கள் எஞ்சியிருப்பதால் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை ஆல் அவுட் செய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்காவது வெற்றி வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு சுத்தமாக வெற்றி வாய்ப்பே கிடையாது. 

இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டம் முழுவதும் கட்டையை போட்டு கிடக்க முயலுமா? அல்லது வெற்றியை நோக்கி துணிந்து ஆடுமா? இங்கிலாந்து அணியின் அணுகுமுறையை பொறுத்துத்தான் போட்டியின் முடிவு இருக்கும். அடித்து ஆடமுயன்றால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக கிடைக்கும். டிஃபென்ஸ் ஆடி நாள் முழுவதையும் கடத்த நினைத்தால், ஆஸ்திரேலிய அணி, அட்டாக் செய்து ஆல் அவுட் செய்யமுயலும். ஆக மொத்தத்தில் ஒன்று ஆஸ்திரேலியா வெல்லும் அல்லது போட்டி டிரா ஆகும்.