ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆஸி., வீரர்கள் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜூலை 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த ஃபைனலில் ஆடும் இந்திய அணி, அதன்பின்னர் இங்கிலாந்திலேயே தங்கியிருந்து, ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

அதன்பின்னர் அக்டோபர் பிற்பாதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ளது. இதற்கிடைப்பட்ட காலம் தான் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த ஒரே வாய்ப்பு. எனவே அதை பயன்படுத்திக்கொள்வதில் உறுதியாக உள்ளது பிசிசிஐ.

எனவே செப்டம்பர் - அக்டோபர் காலக்கட்டத்தில் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ, எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

அந்த சமயத்தில் தொடர்ச்சியாக சர்வதேச தொடர்கள் இருப்பதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகமாகவுள்ள நிலையில், ஆஸி., வீரர்கள் ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளதால், ஐபிஎல்லில் ஆஸி., வீரர்கள் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.