ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது.  

கடந்த 3ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, லபுஷேனின் அபாரமான இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில்ம் 454 ரன்களை குவித்தது. லபுஷேன் 215 ரன்களை குவித்து அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதமும் டாம் பிளண்டெலும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் 29 ஓவர்களை சிறப்பாக ஆடி, விக்கெட் இழப்பின்றி இரண்டாம் நாளை 63 ரன்களுடன் முடித்தனர். ஆனால் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் நேதன் லயனை சுழலை சமாளிக்க முடியாமல் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

198 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர், அதிரடியாக ஆடி சதமடித்தார். முன்னிலை நன்றாக இருப்பதால், விரைவில் முடிந்தவரை ரன்களை குவித்துவிட்டு நியூசிலாந்தை பேட்டிங் ஆடவிட வேண்டும் என்பதால், அடித்து ஆடி விரைவில் ஸ்கோர் செய்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸூம் வார்னருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். பர்ன்ஸ் 40 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வார்னருடன் கைகோர்த்த லபுஷேன், வழக்கம்போலவே இந்த இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடினார். 

லபுஷேனும் விரைவில் ரன்களை சேர்த்தார். அடித்து ஆடிய அவர் 74 பந்தில் 59 ரன்களை குவித்திருந்த நிலையில், மேட் ஹென்ரியின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 217 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. வார்னர் 159 பந்தில் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதையடுத்து மொத்தமாக 415 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 416 ரன்கள் என்ற கடினமான இலக்கை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. மிகக்கடினமான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். வெறும் 22 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். 

தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவரையும் மிட்செல் ஸ்டார்க் வீழ்த்தினார். ஜீட் ராவல் மற்றும் க்ளென் ஃபிலிப்ஸ் ஆகிய இருவரையும் நேதன் லயன் வீழ்த்தினார். இதையடுத்து ரோஸ் டெய்லரும் வாட்லிங்கும் இணைந்து ஆடிவருகின்றனர். நான்காம் நாளான இன்றைய ஆட்டம் முடிய 36 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை அடித்துள்ளது. இன்றைய ஆட்டத்திலோ அல்லது நாளைய ஆட்டத்தின் முதல் செசனிலோ இந்த போட்டி முடிந்துவிடும். எனவே ஆஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு நிகராக ஆஸ்திரேலிய அணி, வெற்றிகளையும் புள்ளிகளையும் குவித்துவருகிறது. ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெல்வது உறுதியாகிவிட்டதால் இதற்கு ஒரு 40 புள்ளிகளை பெறும். ஏற்கனவே 256 புள்ளிகளை பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா, இப்போது கிடைக்கப்போகும் 40 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 296 புள்ளிகளை பெறும். இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.