Asianet News TamilAsianet News Tamil

பாபர் அசாமுக்கு பிறகு மளமளவென சரிந்த பாகிஸ்தான்.. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 

australia beat pakistan by innings and 5 runs in first test
Author
Brisbane QLD, First Published Nov 24, 2019, 12:04 PM IST

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஜோ பர்ன்ஸும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வார்னரும் பர்ன்ஸும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 222 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடிய வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். பர்ன்ஸ் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

வார்னர் 154 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. ஆனால் வழக்கம்போலவே இந்த போட்டியிலும் அபாரமாக ஆடிய மார்னஸ் லபுஷேன், 185 ரன்களை குவித்து 15 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். மேத்யூ வேட் தன் பங்கிற்கு 60 ரன்கள் சேர்த்து கொடுத்தார். லபுஷேன் ஆட்டமிழந்த பிறகு, கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. 

australia beat pakistan by innings and 5 runs in first test

340 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், மறுபடியும் சொதப்பினர். தொடக்க வீரரும் கேப்டனுமான அசார் அலி 5 ரன்களிலும் ஹாரிஸ் சொஹைல் 8 ரன்களிலும் ஆசாத் ஷாஃபிக் ரன்னே எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

25 ரன்களுக்கே பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தொடக்க வீரர் ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த மசூத், தனக்கு கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், 42 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த இஃப்டிகார் அகமதுவும் ரன்னே எடுக்காமல் நடையை கட்டினார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். பாபர் அசாமின் உண்மையான திறமை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படவில்லை என்ற ஏக்கம் இருந்தவர்களுக்கு இந்த போட்டியில் அந்த ஏக்கத்தை போக்கினார் பாபர் அசாம். 

australia beat pakistan by innings and 5 runs in first test

நிதானமாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் ஆடிய பாபர் அசாம் சதமடித்து அசத்தினார். பாபர் அசாம் சதமடிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய முகமது ரிஸ்வானும் அரைசதம் அடித்தார். பாபர் அசாமின் சதம், ரிஸ்வானின் பொறுப்பான பேட்டிங்கால், பாகிஸ்தான் அணி, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் நன்றாக ஆடி பாகிஸ்தான் அணியை மீட்டுக்கொண்டிருந்தபோது, பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் லயன். அணியின் ஸ்கோர் 226 ஆக இருந்தபோது, ஆஸ்திரேலிய அணியை விட 114 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தினார் நாதன் லயன். பாபர் அசாம் 104 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஸ்வானுடன் யாசிர் ஷா ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக ஆடிய பாபர் அசாம் தனது பணியை முழுமையாக செய்யாமல் சென்றுவிட்டதை அடுத்து, பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 95 ரன்கள் அடித்த ரிஸ்வான், 5 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். யாசிர் ஷா 42 ரன்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் அடுத்த 3 ஓவரில் வீழ்த்திவிட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். 

australia beat pakistan by innings and 5 runs in first test

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 335 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. ஆட்டநாயகனாக லபுஷேன் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த போட்டியின் வெற்றிக்கு 60 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 116 புள்ளிகளுடன் இந்தியாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 300 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி,வங்கதேசத்தை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தவுள்ளதால் 360 புள்ளிகளை இன்று பெற்றுவிடும். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios