ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆடாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி செய்தார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் அபாரமாக பேட்டிங் ஆடி 95 ரன்கள் அடித்தார். 5 ரன்னில் சதத்தை தவறவிட்டார் வார்னர். அவருடன் இணைந்து நன்றாக ஆடிய மார்னஸ் லபுஷேன், ஜோஸ் பட்லர் 2 கேட்ச்கள் தவறவிட்ட வாய்ப்பை பயன்படுத்தி சதமடித்தார். 103 ரன்கள் அடித்தார் லபுஷேன். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் அபாரமாக ஆடி 93 ரன்கள் அடித்தார். ஆனால் ஸ்மித்தும் 7 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அலெக்ஸ் கேரியின் அரைசதம் (51) மற்றும் மிட்செல் ஸ்டார்க், மைக்கேல் நெசெரின் பின்வரிசை பங்களிப்பால் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் (62) மற்றும் டேவிட் மலான்(80) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் வெறும் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

237 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தலா 51 ரன்கள் அடித்தனர். கேமரூன் க்ரீன் 33 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.

மொத்தமாக 437 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி, 438 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 86 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜோஸ் பட்லர், ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஆலி ராபின்சன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி, ஆட்டத்தை டிரா செய்ய போராடினார் ஜோஸ் பட்லர். 207 பந்துகள் பேட்டிங் ஆடி இங்கிலாந்துக்கு டிரா நம்பிக்கையை கொடுத்த பட்லரும், கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் கடைசி செசனில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஆண்டர்சனும் ஆட்டமிழக்க, 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இதையடுத்து 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மார்னஸ் லபுஷேன் தேர்வு செய்யப்பட்டார்.