ஆசிய கோப்பை 2023 எங்கு நடக்கிறது..? மே 28 இறுதி முடிவு
ஆசிய கோப்பை எங்கு நடத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவு வரும் 28ம் தேதி எட்டப்படும் என்று தெரிகிறது.
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை.
அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது. மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தர முடியாது என்றும், இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தானும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட இந்தியாவிற்கு வராது என்று மிரட்டிப் பார்த்தது. ஆனால் உலகின் பலம் வாய்ந்த மற்றும் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதற்கெல்லாம் அசரவில்லை.
பிசிசிஐ-யை எதிர்த்து செயல்பட முடியாது என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் முறையை பரிந்துரைத்தது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்றும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று பரிந்துரைத்தது. ஆனால் அதற்கு இலங்கை மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து ஆசிய கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடத்தப்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்திருந்தார். ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் நடத்தும். ஆனால் போட்டிகள் இங்கிலாந்தில் நடத்தப்படும் என்றும், இதுகுறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் ஃபைனல் நடக்கும் மே 28ம் தேதி ஆசிய கோப்பை குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் தலைவர்களின் கலந்தாலோசித்து அன்றைய தினம் இறுதி முடிவு எட்டப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளை காண ஆசிய கிரிக்கெட் அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மே 28ம் தேதி ஆசிய கோப்பை தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.