ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே அணி, வெற்றிகரமாக திகழ்வதற்கு அந்த அணியின் வலுவான கோர் டீமே காரணம். கேப்டன் தோனி, ஜடேஜா, ரெய்னா, பிராவோ என வலுவான கோர் டீமை கொந்துள்ளது சிஎஸ்கே. அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக சொந்த மண்ணை சேர்ந்த அஷ்வினும் ஒரு காலத்தில் திகழ்ந்தார். 2008லிருந்து 2015 வரை சிஎஸ்கே அணியில் ஆடிய அஷ்வின், 2018ல் கழட்டிவிடப்பட்டார். 

2016, 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் சிஎஸ்கே அணி சூதாட்டப்புகார் பிரச்னையால் ஆடவில்லை. 2018ல் அஷ்வினை கழட்டிவிட்டு ஹர்பஜனை எடுத்தது அணி நிர்வாகம். சிஎஸ்கே அணிக்காக 8 சீசன்களில் ஆடிய அஷ்வின், சிஎஸ்கே அணியில் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார். 

சஞ்சய் மஞ்சரேக்கருடனான உரையாடலில் பேசிய அஷ்வின், ஐபிஎல்லில் என் முகத்திலேயே அறைவது மாதிரியான ஒரு சம்பவம் 2010ல் நடந்தது. முதல் தர கிரிக்கெட்டில் வீசுவதை விட ஐபிஎல்லில் வீசுவது எளிது என்றுதான் நினைத்தேன். ஆனால் 2010ல் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பாவும் மார்க் பவுச்சரும் எனக்கு சரியான பாடம் புகட்டினர். அந்த குறிப்பிட்ட போட்டியில், முக்கியமான ஓவர்களான 14, 16, 19, 20 ஆகிய ஓவர்களை நான் வீசினேன்.

அப்போதைய இளம் வீரரான எனக்குள் இருந்த இளமையும் துடிப்பும், இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல என்ற தைரியத்தை கொடுத்தது. அதிலிருந்த சவாலை நான் அறிந்திருக்கவில்லை. அதை விக்கெட் வீழ்த்துவதற்கான வாய்ப்பாக நினைத்தேன். ஆனால் நான் விக்கெட்டே வீழ்த்தவில்லை. மாறாக 40-45 ரன்களை வாரி வழங்கினேன். அந்த போட்டியில் சிஎஸ்கே தோற்றது. அதற்கடுத்த போட்டியிலும் நான் சரியாக வீசவில்லை. சூப்பர் ஓவரில் சிஎஸ்கே தோற்றது.

அந்த 2 போட்டிகளில் நான் சரியாக ஆடாததால் அடுத்த போட்டியில் 15 பேர் கொண்ட அணியில் கூட எனது பெயர் இல்லை. மொத்தமாக தூக்கியெறியப்பட்டேன். அந்த சம்பவம் எனது செவிட்டில் அறைந்தது போல இருந்தது. அந்த 2 போட்டிகளுக்கு முன் நடந்த 3 போட்டிகளில் அருமையாக வீசியிருந்தேன். ஆனாலும் அந்த 2 போட்டிகளில் சரியாக வீசவில்லை என்பதற்காக நான் தூக்கியெறியப்பட்டேன். இது எல்லா பவுலர்களுக்குமே நடப்பதுதான். எனக்கு மட்டும் புதிதாக நடப்பதல்ல. ஆனாலும் நான் ஓரங்கட்டப்பட்டேன்.

உண்மையாகவே எனக்கும் ஃப்ளெமிங்கிற்கும் இடையே நல்ல உறவு கிடையாது. அவர் என்னுடன் பேசவே மாட்டார். அவர் மீது நான் நிறைய மதிப்பு வைத்திருந்தேன். ஆனாலும் அவர் என்னிடம் பேசமாட்டார் என்று தனது ஐபிஎல் கெரியரில் நடந்த மோசமான சம்பவம் குறித்து அஷ்வின் பகிர்ந்துள்ளார்.

2018 ஐபிஎல்லில் சிஎஸ்கேவால் கழட்டிவிடப்பட்ட அஷ்வின், அதன்பின்னர் இரண்டு சீசன்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அடுத்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு ஆடுகிறார் அஷ்வின்.