விஜய் ஹசாரே தொடர் நேற்றுடன் முடிந்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 253 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் விஜேடி முறைப்படி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கர்நாடக அணி கோப்பையை வென்றது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய அஷ்வின், அந்த தொடர் முடிந்ததை அடுத்து விஜய் ஹசாரேவில் தமிழ்நாடு அணிக்காக இறுதி போட்டியில் ஆடினார். அந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அஷ்வின் சோபிக்கவில்லை. மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த அவர், வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்தார். பவுலிங்கிலும் பெரிதாக செயல்படவில்லை. அவர் 2 ஓவர் மட்டுமே வீசியிருந்தார். அதில் 11 ரன்கள் கொடுத்திருந்தார். மழை குறுக்கிட்டதால் முழு போட்டியும் நடக்காததால், அவரது முழு பவுலிங் கோட்டாவை அவர் முடிக்கவும் முடியாமல் போனது. 

இந்த போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த அஷ்வின், பிசிசிஐ லோகோவை கொண்ட ஹெல்மெட்டை அணிந்துவந்தார். பிசிசிஐ லோகோவை சர்வதேச போட்டிகளில் ஆடும்போதுதான் பயன்படுத்த வேண்டும். உள்நாட்டு போட்டிகளில் ஆடும்போது பயன்படுத்தக்கூடாது. ஆனால் அஷ்வின் பிசிசிஐ லோகோவுடன் உள்ள ஹெல்மெட்டை அணிந்திருந்தார். 

உடை, ஹெல்மெட் ஆகியவற்றில் ஒழுங்குமுறைகள் உள்ளன. அதை வீரர்களுக்கு பிசிசிஐ தெளிவுபடுத்தியிருக்கும். எனவே அவற்றையெல்லாம் சரியாக பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றவில்லை எனில், போட்டி நடுவர், அந்த குறிப்பிட்ட வீரருக்கு அபராதம் விதிக்கமுடியும். எனவே அஷ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.