அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. 

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் பல இளம் வீரர்கள் உள்ளனர். இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி, உலக கோப்பை அணியில் இடம்பெறும் கனவில் இருக்கும் நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் ஒரேயொரு ஃபாஸ்ட் பவுலருக்கான இடம் மட்டுமே காலியாக இருப்பதாகவும் கேப்டன் கோலி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்ட அஷ்வின், உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கும் நம்பிக்கையில் உள்ளார். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் வருகைக்கு பிறகு அஷ்வின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை படைத்துவருகிறார். 

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கும் நம்பிக்கையில் இருப்பதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அஷ்வின், நான் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கிரிக்கெட் ஆடுவேன். எனக்கு கிரிக்கெட் ஆடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும். ஆனால் காயம் காரணமாக என்னால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஆடமுடியாமல் போனது. என்னால் களத்தில் ஆடாமல் போட்டியை டிவியில் உட்கார்ந்து பார்ப்பது சுத்தமாக பிடிக்காது. 

நல்லவேளையாக காயத்தில் இருந்து மீண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறேன். டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது அனைத்து வீரர்களின் கனவாக இருக்கும். இந்திய அணியில் ஆடவேண்டும் என்ற கனவு யாருக்குத்தான் இருக்காது. நானும் கண்டிப்பாக இடம்பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. யுவராஜ் சிங் 2014 டி20 உலக கோப்பை அணியில் இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்தார். அதேபோல 2017 சாம்பியன்ஸ் டிராபி அணியிலும் யுவராஜ் இடைவெளிக்கு பிறகுதான் கம்பே கொடுத்தார். எனக்கு வெறும் 33 வயதுதான். எனவே எனக்கும் நம்பிக்கையிருக்கிறது என்று அஷ்வின் தெரிவித்தார்.