ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. 

முதல் டெஸ்ட்டில் இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஷமி காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய நிலையில், 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரைவிட்டு விலகினார். ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக, நெட் பவுலராக எடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனவே 3வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடுவதற்கு நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இவர்கள் மூவரில் யார் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஷிஸ் நெஹ்ரா, ஷர்துல் தாகூர் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் முறையே ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் காயமடைந்ததால் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். ஆனால் நவ்தீப் சைனியோ ஆரம்பத்திலேயே இந்திய அணியில் எடுக்கப்பட்டவர். ஆரம்பத்திலேயே சைனிக்கு முன்னுரிமை கொடுத்து அவரை அணியில் எடுத்திருக்கும் பட்சத்தில், அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத்தான் ஆடும் லெவனில் எடுத்தாக வேண்டும்.

கூக்கபரா பந்தில் நேரம் ஆக ஆக நவ்தீப்பின் வேகம் தேவைப்படும்; அவர் ரிவர்ஸ் ஸ்விங்கும் செய்வார். முந்தைய ஆஸி., வீரர்களான ஹைடன், பாண்டிங்கை போல இப்போதைய ஆஸி., வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக ஆடுவதில்லை. அந்தவகையில், ஷர்துல் தாகூர், நடராஜனைவிட நவ்தீப் சைனி பவுன்ஸர்களை நன்றாக வீசுவார். சைனி சராசரியாக 140 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். எனவே சிட்னி டெஸ்ட்டில் தாகூர், நடராஜனை விட சைனி தான் சரியான தேர்வாக இருப்பார் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார்.