இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்காற்றியவர் தோனி. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), டி20 உலக கோப்பை(2007), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன்.

தோனி நீண்ட போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு ஒருவழியாக 2004 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். தோனி இந்திய அணியில் இடம்பிடிக்க பட்ட கஷ்டத்திற்கு சற்றும் குறைவில்லாமல் அவரது ஆரம்ப கட்டத்தில் கஷ்டப்பட்டார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆகிய இரண்டிலுமே சொதப்பினார். ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து அப்போதைய கேப்டன் கங்குலி, அவருக்கு தொடர் வாய்ப்புகள் அளித்தார்.

தன் மீது கேப்டனும் அணி நிர்வாகமும் வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், 2005ம் ஆண்டு இதே தினத்தில்(ஏப்ரல் 5) தனது பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்த தோனி, அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்த தோனி, 2007ல் இந்திய அணியின் கேப்டனாகவே ஆகிவிட்டார். அவரது வளர்ச்சி அபரிமிதமானது. அவர்  கேப்டனானதற்கு பின்னர் சாதித்தவையெல்லாம் வரலாறு.

அவர் முதல் சதமடித்த தினமான இன்றைய தினத்தில் தோனியை ரசிகர்கள் நினைவுகூர்ந்துவருகின்றனர். இந்நிலையில், அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அஹமதாபாத்தில் நடந்த போட்டியில் கேட்ச்சை கோட்டைவிட்ட தோனியை, பவுலர் நெஹ்ரா திட்டிய வீடியோ வைரலானது. 2005ல் இந்தியாவில் நடந்த தொடரில் அஹமதாபாத்தில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 315 ரன்கள் அடித்தது. 316 ரன்கள் என்ற இலக்கை இன்னிங்ஸின் கடைசி பந்தில் அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா 9 ஓவர்கள் வீசி 75 ரன்களை வாரி வழங்கியதுடன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின் 4வது ஓவரில் நெஹ்ரா வீசிய பந்து, ஷாஹித் அஃப்ரிடியின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனி மற்றும் முதல் ஸ்லிப்பில் நின்ற ராகுல் டிராவிட் ஆகிய இருவருக்கும் இடையே போய்விட்டது. அதை பிடிக்க தோனி தவறிவிட்டார். அதனால் கடும் கோபமடைந்த நெஹ்ரா, அவர்களை நோக்கி கடுமையாக கத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ இதோ...

அதன்பின்னர் தோனியின் கேப்டன்சியில் நெஹ்ரா ஆடியிருக்கிறார். தோனி மிகச்சிறந்த கேப்டனாகவும் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் உச்சம் தொட்டுவிட்டார். அன்று ஒரு கேட்ச்சை விட்டதற்காக நெஹ்ராவின் அதிருப்தியை, எதார்த்தத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்ட தோனி, அவரது கெரியர் முடிந்துவிட்ட இந்த சூழலில், ஆல்டைம் பெஸ்ட் விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில், 15 ஆண்டுகள் கழித்து அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள நெஹ்ரா, தோனி மீது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ செம வைரலானது. நிறைய பேர் அது விசாகப்பட்டின போட்டியில் நடந்த சம்பவம் என்று நினைத்துக்கொண்டனர். ஆனால் அது அஹமதாபாத்தில் நடந்த போட்டி. அஃப்ரிடியின் பேட்டில் எட்ஜாகி பந்து பின்னால் சென்றது. தோனிக்கும் டிராவிட்டுக்கும் இடையே சென்றுவிட்டது. அந்த கேட்ச்சை பிடிக்காததால் கோபமாக கத்தினேன். அதை இப்போது நினைத்து பார்க்கும்போது நான் பெருமைப்படவில்லை.

அதற்கு முந்தைய எனது பந்தைத்தான் அஃப்ரிடி சிக்ஸர் விளாசினார். இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒருவித அழுத்தம் இருக்கும். அந்த சிக்ஸருக்கு அடுத்து உடனடியாக விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தினேன். ஆனால் அதுவும் மிஸ் ஆனதால் கோபம்வந்துவிட்டது. ஆனால் அந்த போட்டிக்கு பின்னர் டிராவிட், தோனி இருவருமே என்னிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் நன்றாக பேசினார். அதற்காக நான் செய்தை நியாயப்படுத்தவில்லை என்று நெஹ்ரா தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் தோனி இருந்ததால் தான் அது வைரலானதே தவிர என்னால் வைரலாகவில்லை.