இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் அனுபவத்தை பயன்படுத்தி அபாரமாக ஆடிய ஆஞ்சலோ மேத்யூஸ் சதமடித்து, இலங்கை அணியை நல்ல ஸ்கோரை நகர்த்தி சென்றுகொண்டிருக்கிறார்.
இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா ஆறு ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஃபெர்னாண்டோ டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான திரிமன்னே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடி 42 ரன்கள் அடித்தார்.
3 விக்கெட்டுக்கு பிறகு அனுபவ வீரர் ஆஞ்சலோ மேத்யூஸுடன், ஐந்தாம் வரிசையில் இறங்கிய கேப்டன் சண்டிமால் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். மேத்யூஸும் சண்டிமாலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அரைசதம் அடித்த சண்டிமாலை 52 ரன்களுக்கு வீழ்த்தி அந்த ஜோடியை பிரித்தார் மார்க் உட். அனுபவத்தை பயன்படுத்தி அபாரமாக ஆடிய மேத்யூஸ் சதமடித்தார். மேத்யூஸ் 107 ரன்களுடனும் டிக்வெல்லா 19 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் அடித்துள்ளது.
