இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3வது போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மிகக்கடுமையாக உள்ளதால், ஆஸி.,க்கு வந்தபோது 2 வாரம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்களை மீண்டும் பிரிஸ்பேனில் குவராண்டினில் இருக்க வேண்டும் என்று குயின்ஸ்லாந்து நிர்வாகம் தெரிவித்தது.

இதனால் அதிருப்தியடைந்த இந்திய அணி நிர்வாகம், அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அப்படி மீண்டும் குவாரண்டினில் இருக்க வேண்டுமென்றால், பிரிஸ்பேனுக்கு வரமுடியாது. சிட்னியிலேயே 4வது டெஸ்ட்டையும் நடத்த வேண்டும் என்று தெரிவித்தது. விதிகளை பின்பற்ற முடியவில்லை என்றால், இந்திய அணி பிரிஸ்பேனுக்கு வரவே தேவையில்லை என்ற குயின்ஸ்லாந்து எம்பிக்கள் தெரிவித்தது இந்திய வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய அணி கண்டிப்பாக பிரிஸ்பேனில் கடும் கண்டிஷன்களை பின்பற்ற வேண்டுமென்றால், கடைசி டெஸ்ட்டை ரத்து செய்துவிட்டு, 3 டெஸ்ட் போட்டிகளுடன் இந்தியாவிற்கு திரும்புவது குறித்து பரிசீலனை செய்துவருகிறது. 

பிசிசிஐ பிரிஸ்பேனில் ஆடக்கூடாது என்று நினைத்தால் அதை சாதித்துவிடும் என்று ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங் ஆண்ட்ரூஸை குரங்கு என்று திட்டியதாக எழுந்த 2008 டெஸ்ட் தொடரின் போது எழுந்த சர்ச்சையில் பிசிசிஐ அதிகாரத்தை பயன்படுத்தி நடந்ததை மாற்றியதாக பலமுறை குற்றம்சாட்டியுள்ள ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இம்முறையும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் கிரிக்கெட் கெரியர் அந்த சம்பவத்திற்கு பிறகுதான் அஸ்தமனமானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட் குறித்து பேசியுள்ள ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், பிசிசிஐயுடன் டீல் செய்திருக்கிறீர்களா? அவர்கள் தான் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அதிகாரத்தை காட்டுவார்கள். குயின்ஸ்லாந்து அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிசிசிஐ என்ன நினைக்கிறதோ அதைத்தான் செய்யும் என்று சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

2008ல் அவர் விஷயத்தில் அவருக்கு ஏதோ அநீதி இழைக்கப்பட்டதாகவும், அதற்கு பிசிசிஐ தான் காரணம் என்பதுபோலவும் தொடர்ந்து பிசிசிஐ மீதான வன்மத்தை உமிழ்ந்துவருகிறார்.