வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆண்டர்சனின் செயல் சர்ச்சைக்குள்ளானது. 

கொரோனா வைரஸ், மக்களின் பழக்கவழக்கங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவது ஆகியவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை ஆகிவிட்டன. 

அந்தவகையில், கிரிக்கெட்டிலும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக, பந்தை எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் போட்டியில் ஆண்டர்சன் எச்சில் தொட்டு தேய்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறவுள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் அடித்தது. 114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 313 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து 200 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கடைசி இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸை இங்கிலாந்து அணியால் சுருட்ட முடியவில்லை. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சன், எச்சில் தொட்டு தேய்ப்பது போல் ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. முழுமையாக தெரியாத அந்த வீடியோவில், ஆண்டர்சனின் கை எச்சிலை தொடுவது போல உள்ளது. ஆண்டர்சன் பந்தில் எச்சில் தொட்டு தேய்த்ததாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இது சர்ச்சையாக வெடித்துள்ளது. 

ஆனால், அதுகுறித்த மற்ற வீடியோக்களையும் தான் ஆய்வு செய்ததாகவும், ஆண்டர்சன் அவரது நெற்றியிலும் புருவத்திலும் இருந்த வியர்வையை தொட்டுத்தான் பந்தை தேய்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இது சர்ச்சையாகியுள்ளது.