எல்லா காலக்கட்டத்திலுமே ஃபாஸ்ட் பவுலிங்கில் சிறந்து விளங்கும் அணி பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி உருவாக்கியதில் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். 

1997ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். பாகிஸ்தான் அணிக்காக  46 டெஸ்ட் போட்டிகளிலும் 163 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார் அக்தர். அக்தர் ஆடிய காலத்தில், எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் மிரட்டலான பவுலர்களில் அக்தரும் ஒருவர். 

160 கிமீ வேகம் வரை வீசியுள்ளார் அக்தர். அக்தரின் தோற்றம், அவர் பந்துவீச ஓடிவரும் வேகம் என அனைத்துமே மிரட்டலாக இருக்கும். அதேபோலத்தான் அவரது பவுலிங்கும் பேட்ஸ்மேன்களை மிரட்டும். 

இந்நிலையில், அக்தர் தனது கெரியரில் மோசமான ஆட்டம் எது என்று மனம் திறந்துள்ளார். இதுகுறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசிய அக்தர், 2003 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான தோல்வி தான் தனது கெரியரில் மோசமான போட்டி என்று அக்தர் தெரிவித்துள்ளார்.

2003 உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், 274 ரன்கள் என்ற சவாலான இலக்கை அடிக்கவிடாமல் இந்திய அணியை எங்களால் சுருட்டமுடியாமல் போனது. அதுதான் எனது கெரியரின் மோசமான மேட்ச். நாங்கள் முதல் பேட்டிங் ஆடி முடித்ததும் சக வீரர்களிடம் சென்று, இந்த ஸ்கோர் போதாது; கூடுதலாக 30 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று கூறினேன்.  273 ரன்களே போதாது என்றால் வேறு எந்த ஸ்கோர் போதுமான ஸ்கோர்..? என்று கேள்வி எழுப்பியதோடு அதெல்லாம் போதும் என்றனர். 

ஆனால் செஞ்சூரியன் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதனால்தான் அப்படி கேட்டேன். ஆனால் அதெல்லாம் போதும் என்றனர். கடைசியில் நடந்தது என்ன..? இந்திய அணி வெற்றி பெற்றது. 

நான் பந்துவீச செல்வதற்கு முன்பே எனது இடது கால் முட்டி வலித்தது. அதனால் என்னால் வழக்கம்போல ஓடிவந்து முழுத்திறனுடன் வீச முடியவில்லை. சரியாக ஓடமுடியாததால் அரைகுறையாக வீசினேன். விளைவு, சச்சினும் சேவாக்கும் இணைந்து வெளுத்து வாங்கிவிட்டனர். சச்சின் எனது பந்தை பாயிண்ட் திசையில் சிக்ஸர் விளாசினார். அவர் அடித்து துவம்சம் செய்துகொண்டிருந்தார். அவருக்கு எப்படி வீசுவதென்றே எனக்கு தெரியவில்லை. 

அதன்பின்னர் என்னை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தார் கேப்டன் வக்கார் யூனிஸ். நானும் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தினேன். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி வென்றது. நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருந்தும் கூட, 274 ரன்களை கட்டுப்படுத்தி இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியவில்லை. அதுதான் என் கெரியரில் மோசமான மேட்ச் என்று அக்தர் கூறியுள்ளார்.