உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடிவருகிறது. உலக கோப்பையில் மட்டுமல்ல; சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி சரியாக ஆடவேயில்லை.

உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே பாகிஸ்தான் வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வென்றது. ஆனால் இலக்கை விரட்டிய எந்த போட்டியிலும் வெல்லவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணிக்கு எதிராக போராடமலேயே தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியிடம் டீம் ஸ்பிரிட்டே இருப்பது போன்று தெரியவில்லை. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக போராடாமல் மோசமாக தோற்றது. 

பாகிஸ்தான் அணி படுமோசமாக இருப்பதற்கு வலுவான கேப்டன் இல்லாததும் ஒரு காரணம். சர்ஃபராஸ் அகமது உத்தி ரீதியாகவும் கள வியூகத்திலும் கைதேர்ந்தவராக இல்லை. இந்தியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து செய்யப்பட்டனர். 

குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

பாகிஸ்தான் வீரர்கள், எங்களை விட்ருங்க என்று கெஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். ரசிகர்கள் கூட விமர்சனத்தை நிறுத்திவிட்ட நிலையில், முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் நின்றபாடில்லை. 

பாகிஸ்தான் அணியையும் கேப்டன் சர்ஃபராஸையும் முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அக்தர் தனது அதிருப்தியையும் ஆதங்கத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் அணி குறித்து பேசிய அக்தர், 1999 உலக கோப்பையில் ஆடிய பாகிஸ்தான் வீரர்களில் 10 பேர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆடினார்கள். ஆனால் இந்த உலக கோப்பையில் ஆடும் வீரர்களில் 7 பேர் உலக கோப்பைக்கு பின்னர் தூக்கி எறியப்பட்டு காணாமல் போய்விடுவார்கள் என்று அக்தர் தெரிவித்துள்ளார்.