பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடி, ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அதிரடிக்கு பெயர்போனவர். இவரது அதிரடி பேட்டிங்கால், பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்(476 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அஃப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகே முறியடிக்கப்பட்டது. பேட்டிங்கில் எந்த வரிசையில் இறங்கினாலும் அதிரடியாகவே ஆடுவார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் மிரட்டியவர் அஃப்ரிடி. 

1996ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் சர்வதேச போட்டிகளில் ஆடினார். 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. 2018ம் ஆண்டுவரை டி20 போட்டிகளில் ஆடினார். நீண்டநெடிய அனுபவம் கொண்டவர் அஃப்ரிடி. 

ஏற்கனவே தான் அளித்த ஒரு பேட்டியில், தனது கிரிக்கெட் வாழ்வில் எந்த வீரருக்கும் பயந்ததே இல்லை என அஃப்ரிடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், தான் எதிர்கொண்டதிலேயே யாருடைய பவுலிங் சிறந்தது என்பதை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அஃப்ரிடி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தான், தான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் என அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.