மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் உலக கோப்பை சாதனை ஒன்றை ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ரம் அலி கில் முறியடித்துள்ளார். 

கிரிக்கெட்டில் பெரும்பாலான பேட்டிங் சாதனைகள் சச்சின் டெண்டுல்கர் வசமே உள்ளன. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் ஒவ்வொரு சாதனையாக முறியடித்துவருகிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ரம், சச்சின் டெண்டுல்கரின் உலக கோப்பை சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களை குவித்தது. 312 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி கடுமையாக போராடி 288 ரன்கள் அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இக்ரம் அலி கில் 86 ரன்கள் அடித்தார். 

இதன்மூலம் உலக கோப்பையில் இளம் வயதில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார் இக்ரம் அலி கில். 18 வயது முடிந்து 323 நாட்கள் ஆனபோது 1992ம் ஆண்டு உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் 84 ரன்கள் அடித்ததே உலக கோப்பையில் இளம் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 27 ஆண்டுகள் கழித்து அந்த சாதனையை இக்ரம் முறியடித்துள்ளார். இக்ரம் நேற்று 86 ரன்கள் அடித்தபோது அவருக்கு 18 வயது 278 நாட்கள். இதன்மூலம் சச்சினின் இளம் வயது சாதனையை இக்ரம் முறியடித்துள்ளார்.