இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. கடந்த 2018-2019 சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

எனவே இந்த முறை இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி ஆடாதது அனுகூலமான விஷயமாக அமையும். இந்த தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

வார்னருடன் தொடக்க வீரராக இறங்கிவரும் ஜோ பர்ன்ஸுக்கு பதிலாக இளம் வீரர் புகோவ்ஸ்கி இறங்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், ஜோ பர்ன்ஸ் தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், வார்னருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியிருக்கிறார் என்பதால் எந்தவித காரணமுமின்றி ஜோ பர்ன்ஸை நீக்க தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் தயக்கம் காட்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 

எனவே வார்னரும் பர்ன்ஸுமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பது கில்கிறிஸ்ட்டின் கருத்து.