ரிஷப் பண்ட் தனது கெரியரின் தொடக்கத்தில்தான் இருக்கிறார். ஆனால் இப்போதே அவர் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படுகிறார். தோனி என்பவர் மிகப்பெரிய லெஜண்ட். அவருடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது சரியாக இருக்காது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் ஆரம்பத்தில் படுமோசமாக சொதப்பினாலும் இப்போது தேறிவருகிறார். 

அவர் கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாததும், தோனியின் இடத்தை உடனடியாக அவர் நிரப்ப வேண்டும் என்ற மனப்பான்மையில் விமர்சனங்கள் எழுவதுமே அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய ரிஷப் பண்ட்டும் அதை செய்வதில்லை. தனது நெருக்கடியை மண்டைக்கு ஏற்றி, தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது சூழலுக்கு ஏற்றவாறு அணியின் தேவைக்கு ஏற்ப ஆடுவதா என்பது புரியாமல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். 

விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்புகிறார். தோனி டி.ஆர்.எஸ் எடுப்பதில் வல்லவர். அவரது அனுபவத்தின் வாயிலாகத்தான் அவரால் ரிவியூ எடுப்பதில் வல்லவராக திகழ முடிந்ததே தவிர, உடனடியாக அப்படியெல்லாம் ஆகிவிடமுடியாது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிஷப் பண்ட் ஆர்வக்கோளாறில் ரிவியூ எடுக்குமாறு கேப்டன் ரோஹித்திடம் வலியுறுத்தினார். ரோஹித்தும் ரிவியூ எடுத்தார். ஆனால் அந்த பந்து பேட்டில் படவேயில்லை. அதற்கு ஏன் ரிவியூ எடுக்கச்சொன்னார் என்பது தெரியவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா, தனது தலையில் அடித்துக்கொண்டு சிரித்தார். இதையடுத்து ரிஷப் பண்ட்டை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காய்ச்சி எடுத்தனர். 

ரிஷப் பண்ட் இளம் வீரர். அவர் உடனடியாக தோனியாக நினைத்தால் அது நடக்காது. அதுமட்டுமல்லாமல் அவர் தோனியாக அவசியமே இல்லை என்பதுதான் எதார்த்தம். அதைத்தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 

ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள கில்கிறிஸ்ட், இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நான் ஒன்றை சொல்லியாக வேண்டும். தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட்டு அவரை காலி செய்யாதீர்கள். இன்னொரு தோனியை கண்டிப்பாக உருவாக்க முடியாது. எனவே அவருடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட வேண்டாம். 

என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணியில் இயன் ஹீலி தேர்வு செய்யப்பட்டபோது, நானும் இயன் ஹீலியை போல் உருவாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் கில்கிறிஸ்ட்டாக இருந்துகொண்டே, ஹீலியிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். இதைத்தான் நான் ரிஷப் பண்ட்டிற்கும் அறிவுரையாக கூறுவேன். தோனியிடம் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தோனியாக முயற்சிக்கக்கூடாது. நீ சிறந்த ரிஷப் பண்ட்டாகவே இரு. அதுதான் நல்லது என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.