உலக கோப்பை தொடரில் ஐந்து வெற்றிகளையும் நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளையும் பெற்றும் கூட அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் அணி. இது அந்த அணிக்கு துரதிர்ஷ்டமான சம்பவம்தான்.

நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் அணி. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகள் என தொடர் தோல்விகளுக்கு பிறகு வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி கண்டது. 

இந்த உலக கோப்பை தொடரின் முதற்பாதியில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணி அதிலிருந்து மீண்டெழுந்து பிற்பாதியில் அசத்தியது. ஆனாலும் நெட் ரன்ரேட் குறைவாக இருந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. 

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய சிறந்த அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது உண்மையாகவே துரதிர்ஷ்டமான விஷயம் தான். பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறததால் பல முன்னாள் வீரர்கள் அதிருப்தியாக உள்ளனர். 

அந்த வகையில், பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் மீது பயங்கர கடுப்பில் இருக்கும் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், நாகரீகமற்ற முறையில் சர்ச்சைக்குரிய வகையில் மிகக்கடுமையாக பேசியுள்ளார். மிக்கி ஆர்துர் இறந்தால் ஒழிய அவர் பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகமாட்டார்  என்று அப்துல் ரசாக் பேசியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் டுவீட் செய்துள்ளார்.

அப்துல் ரசாக்கின் சர்ச்சை பேச்சு பாகிஸ்தான் ரசிகர்களாலேயே ரசிக்கப்படாது என்பதில் சந்தேகமில்லை. அப்துல் ரசாக் சமீப காலமாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருகிறார்.