பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி  சிட்னியில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 15 ஓவரில் 107 ரன்கள் அடித்தது. போட்டியின் இடையே மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 38 பந்துகளில் 59 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு டி.எல்.எஸ் முறைப்படி 119 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலிருந்தே அடிக்கத்தொடங்கினார் ஃபின்ச். ஆனால் வார்னர் நிதானமாக ஆடினார். ஆஸ்திரேலிய அணி வெறும் 3.1 ஓவர் மட்டுமே பேட்டிங் ஆடியிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இன்னும் 11 பந்துகள் வீசப்பட்டிருந்தால் போட்டியின் முடிவு கிடைத்திருக்கும். ஆனால் அதற்குள்ளாக மழை வந்துவிட்டதால் போட்டி முடிவின்றி முடிந்துவிட்டது. 

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடிய வெறும் 3.1 ஓவரில் 41 ரன்களை குவித்தது. அதற்கு காரணம் ஆரோன் ஃபின்ச்சின் அதிரடி. முகமது இர்ஃபான் வீசிய 3வது ஓவரில் காட்டடி அடித்து 26 ரன்களை குவித்தார் ஃபின்ச். இர்ஃபான் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரியும் அடித்தார் ஃபின்ச். மூன்றாவது பந்து நோ பால் என்பதால், வீசப்பட்ட ரீபாலில் ஒரு சிக்ஸர் என முதல் மூன்று பந்துகளில் மொத்தமாக 21 ரன்களை சேர்த்தார். அவர் அடித்தது 20 ரன், நோ பாலுக்கு ஒரு ரன் என மொத்தம் 21 ரன்கள் முதல் 3 பந்துகளில் அடிக்கப்பட்டது. நான்காவது பந்தில் ரன் அடிக்கவில்லை. ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரியும் கடைசி பந்தில் ஒரு ரன்னும் அடித்தார் ஃபின்ச்.

இப்படியாக அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவிக்கப்பட்டது. வெறும் 16 37 ரன்களை குவித்தார் ஃபின்ச். மழை குறுக்கிட்டது பாகிஸ்தானுக்கு சாதகமாகிவிட்டது. இல்லையெனில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றிருக்கும்.