1992ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரை வென்ற பாகிஸ்தான் அணி, அதன்பின்னர் 1999 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை முன்னேறியது. ஆனால் இறுதி போட்டியில் படுமோசமாக ஆடி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. 

வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, அந்த உலக கோப்பையில் படுமோசமாக ஆடியதாக அந்த அணியின் முன்னாள் கேப்டனும் அந்த உலக கோப்பையில் ஆடியவருமான அமீர் சொஹைல் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அமீர் சொஹைல், என்னுடைய கிரிக்கெட் அனுபவம் மற்றும் நான் உற்று கவனித்ததன் அடிப்படையில், 1999 உலக கோப்பையில் நாங்கள்(பாகிஸ்தான்) படுமோசமாகத்தான் ஆடினோம் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஒரு போட்டியில் ஒரு குறிப்பிட்ட பேட்டிங் ஆர்டரும் அடுத்த போட்டியில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட பேட்டிங் ஆர்டரும் இறக்கப்படும். பேட்டிங் ஆர்டர் போட்டிக்கு போட்டி மாற்றப்பட்டது. முதல் போட்டியிலிருந்து ஸ்கோர்கார்டை பார்த்தால் அது புரியும். பேட்டிங் ஆர்டரில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டே இருந்தது. 

முகமது யூசுஃப் 1999 உலக கோப்பையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தார். ஆனால் அவருக்கும் அணியில் நிரந்தர இடம் அளிக்கப்படவில்லை. யூசுஃப் அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். அந்த உலக கோப்பையில் பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளின் ஸ்கோர்கார்டை பார்த்தால், மிடில் ஆர்டர் எப்படி சொதப்பியது என்பது தெரியும். 

இஜாஸ் அகமது அந்த உலக கோப்பையில் சரியான ஃபார்மில் இல்லாமல் திணறினார். இன்சமாம் உல் ஹக்கும் ஒருசில போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடினார். இஜாஸ் அகமது மற்றும் இன்சமாம் உல் ஹக்கை அணி சார்ந்திருந்த நிலையில், அவர்கள் இருவருமே அந்த தொடரில் திணறினர். அதனால் அந்த தொடர் முழுவதும் மிடில் ஆர்டர் சொதப்பியது என்று அமீர் சொஹைல் தெரிவித்தார்.