உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடர் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவதற்கான பரிசீலனையில் உள்ள வீரர்களை பரிசோதிக்க ஆஸ்திரேலிய தொடர்தான் கடைசி வாய்ப்பு. 

எனவே ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோருக்கு இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக கோப்பைக்கான அணியில் 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டது. எஞ்சிய 2-3 வீரர்களுக்கான தேவை உள்ளது. 

ரிசர்வ் விக்கெட் கீப்பர், ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர், மாற்று தொடக்க வீரர் ஆகிய மூன்று இடங்களுக்கான வீரர்கள் தேர்வை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட், ராகுல், சித்தார்த் கவுல் ஆகிய மூவரும் அணியில் எடுக்கப்பட்டனர். 

ஆனால் இவர்கள் மூவருக்குமே முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் டி20 தொடரில் நன்றாக ஆடினார். ஆனாலும் அவர் முதல் ஒருநாள் போட்டியில் அணியில் எடுக்கப்படவில்லை. அதேபோல ரிஷப் பண்ட்டை உலக கோப்பைக்கு எடுப்பதாக இருந்தால், இதுவரையிலான அவரது அனுபவத்தை வைத்தோ, இதுவரை அவர் ஆடியதை வைத்தோ கண்டிப்பாக எடுக்க முடியாது. 

அப்படியிருக்கையில், அவர்கள் இருவருக்குமே வாய்ப்பு வழங்கப்படாததையும் இரண்டாவது போட்டியிலாவது வாய்ப்பு வழங்கப்படுமா என்றும் ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார். 

அதேபோல உலக கோப்பைக்கான ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக சித்தார்த் கவுலை அழைத்து செல்லலாமா என்று இந்திய அணி யோசிக்கிறது என்றால், அவரை அணியில் எடுத்துவிட்டு ஆடும் லெவனில் ஏன் வாய்ப்பளிக்கவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மட்டுமே கவுல் இடம்பெற்றுள்ளார். கடைசி 3 போட்டிகளுக்கு புவனேஷ்வர் குமார் வந்துவிடுவார். இந்நிலையில், கவுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது குறித்தும் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார். 

ஆடும் லெவனில் எடுக்கப்படாமல் இருப்பதற்கு இவர்களை ஏன் 15 வீரர்கள் கொண்ட அணியில் எடுக்க வேண்டும்? ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோரை உலக கோப்பை அணியில் எடுப்பதாக இருந்தால் அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். உலக கோப்பைக்கு முன் ரிஷப் பண்ட் மற்றும் ராகுலுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கேப்டன் கோலி உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் ஃபார்ம் எல்லாம் உலக கோப்பைக்கு உதவாது என்று கேப்டன் கோலி தான் கூறினார். அப்படியென்றால் உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும் அல்லவா..? ஆனால் அப்படி வழங்கும் அறிகுறி இல்லை என்பதே சோப்ராவின் கருத்து. 

ஒருவேளை தொடரை வெல்வதுதான் முக்கியம் என்று கருதி, தொடரை வென்றபிறகான போட்டிகளில் ராகுலுக்கும் ரிஷப்பிற்கும் வாய்ப்பளிப்பதாக இருந்தால், அதில் பெரிய பயனில்லை. ஏனெனில் வெற்றி கட்டாயத்துடன் ஆடும்போதுதான் ஒரு வீரரின் மனநிலை, ஆட்டத்திறன் ஆகியவற்றை பரிசோதிக்க முடியும். இந்திய அணி நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என்பதை பார்ப்போம்.

இரண்டாவது போட்டியில் ரிஷப், ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதை பார்ப்போம்.