ஐபிஎல் 14வது சீசனுக்கான சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனிலும் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.
கடந்த சீசனில் கேஎல் ராகுல் தலைமையில், முதல் பாதியில் தோல்விகளை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 2ம் பாதியில் வெற்றிகளை குவித்தது. எனினும் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த சீசனிலும் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறது.

இந்நிலையில், அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அதன்படி, கேஎல் ராகுலுடன் கிறிஸ் கெய்லை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளார். கடந்த சீசனில் ராகுல் - மயன்க் அகர்வால் ஜோடி ஓபனிங்கில் சிறப்பாக ஆடிய போதிலும், ராகுலுடன் கெய்லை தொடக்க வீரராக இறக்குமாறு சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். மயன்க் அகர்வாலை 3ம் வரிசையில் இறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

4ம் வரிசையில் நிகோலஸ் பூரான், 5ம் வரிசையில் தீபக் ஹூடா, 6ம் வரிசையில் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 7ம் வரிசையில் ஷாருக்கான்/மந்தீப் சிங்/சர்ஃபராஸ் கான் ஆகிய மூவரில் ஒருவரை இறக்கலாம் என்றும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாக முருகன் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், தீபக் ஹூடா, மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஷாருக்கான்/மந்தீப் சிங்/சர்ஃபராஸ் கான், முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஜெய் ரிச்சர்ட்ஸன்.
