ஐபிஎல் 15வது சீசனின் நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தே மாதரம், ஜெய் ஹோ ஆகிய பாடல்களை பாடி அரங்கை அதிரவிட்டார். 

ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஃபைனலில் மோதுகின்றன.

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள், கொண்டாட்டம் இல்லாமல் ஐபிஎல் நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் வழக்கமான கொண்டாட்டத்துடன் நடக்கிறது.

இன்று இரவு 8 மணிக்கு ஃபைனல் நடக்கவுள்ள நிலையில், 6.30 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது. மிகப்பெரிய ஜெர்சியை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. நிறைவு விழாவில் ரன்வீர் சிங்கின் நடனம், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் என கலைநிகழ்ச்சிகள் கலைகட்டின.

ரன்வீர் சிங்கின் நடன நிகழ்வு முடிந்த பின், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் நிகழ்ச்சி நடந்தது. வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்ற ஜன கன மன பாடல், முக்காலோ முக்காபுல்லா பாடல் ஆகியவற்றின் ஹிந்து வெர்சன் ஆகியவற்றை பாடி, ஆஸ்கார் விருதை வென்றுகொடுத்த ஜெய் ஹோ பாடலுடன் நிகழ்வை முடித்தார். வந்தே மாதரம், ஜெய் ஹோ பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியபோது அரங்கம் அதிர்ந்தது. 

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் வந்தே மாதரம், ஜெய் ஹோ பாடல்களை பாடியபோது ஒருலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால் நரேந்திர மோடி ஸ்டேடியமே அதிர்ந்தது.