உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக இருந்தாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்ல சான்ஸ் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த உலக கோப்பை லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அனிகளுடனும் மோத உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து ஆடுகளங்கள் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரசிகர்களுக்கு வழங்கப்படும் ஸ்கோர் கார்டுகளில் 500 என்ற எண் அச்சிடப்பட்டு வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நாட்டிங்காமில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்தது. அதேபோல இப்போது நடந்துவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் கூட குறைந்தபட்சம் 350 ரன்களுக்கு மேல் இரு அணிகளும் குவித்துவருகிறது. 

சவுத்தாம்ப்டனில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 373 ரன்களை குவிக்க, பாகிஸ்தான் அணி 361 ரன்களை குவித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேபோல பிரிஸ்டாலில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி வென்றது. 

எனவே இந்த உலக கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இந்த உலக கோப்பை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப்போகிறது.