இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னபின்னமாகியிருந்த சமயத்தில், கங்குலி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியில், யுவராஜ் சிங் முக்கியமானவர். இளம் துடிப்பான மற்றும் அதிரடியான பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கிலும் அசத்தியவர் யுவராஜ்.

கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஃபீல்டிங் முகத்தை மாற்றியவர் யுவராஜ் சிங். தற்போதைய சிறந்த ஃபீல்டர்களாக திகழும் ஜடேஜா, ரெய்னா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா ஆகியோருக்கெல்லாம் முன்னோடிகள் என்றால், அது யுவராஜ் சிங்கும் கைஃபும்தான். அவர்கள்தான் 2000ம் ஆண்டுகளில் தங்களது மிரட்டலான ஃபீல்டிங்கின் மூலம் எதிரணிகளை மிரட்டியவர்கள். 

அதிரடியான பேட்டிங், அசத்தலான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்தவர் யுவராஜ் சிங். இந்திய அணி சர்வதேச கோப்பைகளை வென்ற தொடர்களிலெல்லாம் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு கோப்பைகளையும் இந்திய அணி வென்றபோது, அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். குறிப்பாக 2011 உலக கோப்பையில் தொடர் முழுவதும் அபாரமாக ஆடி தனது முத்திரையை பதித்து உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். அந்த உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றார். பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பு செய்து தொடர் நாயகன் விருதை வென்றார். 

அந்த உலக கோப்பை தொடரின்போதே புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. உலக கோப்பையின் இடையே வாந்தி, மயக்கம் என கடுமையாக அவதிப்பட்ட யுவராஜ் சிங், அதற்கெல்லாம் அசராமல், உலக கோப்பையை வெல்வதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி, உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் இறுதிவரை ஆடி கோப்பையை வென்று கொடுத்தார். அதன்பின்னர் அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்ற யுவராஜ் சிங், புற்றுநோயிலிருந்து மீண்டு, மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று ஆடினார். 

2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அப்படியே ஓரங்கட்டப்பட்டார். யுவராஜ் சிங்கிற்கு பிறகு, அவரது இடத்தை நிரப்ப 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழுவால் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கண்டறிய முடியவில்லை. 2 ஆண்டுகளாக நடத்திய பரிசோதனைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து, சரியான 4ம் வரிசை மற்றும் 5ம் வரிசை வீரர்களை தேர்வு செய்ய முடியாததால், மிடில் ஆர்டரில் பயங்கரமாக சொதப்பி 2019 உலக கோப்பையை இழந்தது இந்திய அணி. 

யுவராஜ் சிங் பல சம்பவங்கள் செய்திருந்தாலும், கிரிக்கெட் ரசிகர்களால் காலத்தால் அழியாத சம்பவம் என்றால், அது 2007 டி20 உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததுதான். அந்த குறிப்பிட்ட ஓவருக்கு முந்தைய ஓவரின் முடிவில் யுவராஜ் சிங்கை ஃபிளிண்டாஃப் வம்பு இழுத்துவிட்டு செல்வார். ஃபிளிண்டாஃபின் மேல் கடுங்கோபத்தில் இருந்த யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பிராட் வீசிய அடுத்த ஓவரில் 6 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி அசத்திய யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் கெரியரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்காததும், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் போனதும்தான் ஒரே குறை. 40 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய யுவராஜ் சிங், வெறும் 1900 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத யுவராஜ் சிங், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டு, வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

அதிரடி பேட்ஸ்மேனும் உலக கோப்பை நாயகனும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான யுவராஜ் சிங்கிற்கு ஏசியாநெட் தமிழ் இணையதளத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.