இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 2 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி டெல்லியில் நடக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் (1.30 மணிக்கு) போட்டி தொடங்க உள்ளது.

இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் சாஹலுக்கு பதிலாக ஷமியை அணியில் இணைத்து, இந்த ஒரே மாற்றத்துடன் களமிறங்க வாய்ப்புள்ளது என்று நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் எழுதியிருந்தோம். 

ஆனால் இந்த மாற்றம் வேறு விதத்தில் நடந்திருக்கிறது. சாஹலின் நீக்கமும் ஷமியின் சேர்ப்பும் நடந்துள்ளது. ஆனால் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாஹலுக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் - பும்ரா - ஷமி என 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, குல்தீப், பும்ரா.