Asianet News TamilAsianet News Tamil

தீபாவளி 2022 : நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும் தெரியுமா?

தீமையின் வடிவாய் உருவான அசுரர்களை கடவுள் அவதாரம் எடுத்து அழித்த காரணத்தினால் உருவானது தான் தீபாவளி பண்டிகை என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன.

When and how is Diwali celebrated in 2022
Author
First Published Oct 17, 2022, 11:35 PM IST

தீமையின் வடிவாய் உருவான அசுரர்களை கடவுள் அவதாரம் எடுத்து அழித்த காரணத்தினால் உருவானது தான் தீபாவளி பண்டிகை என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன. அதோடு தீபங்களின் திருவிழாவாக தான் தீபாவளியை கொண்டாடி வருகிறோம். இந்துக்களின் பாரம்பரியமாக தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது பின்பற்றப்படுகிறது. ஆன்மீகத்தின் வெளிப்பாடாக உள்ள விளக்கேற்றும் முறையானது நம்முள் இருக்கும் அறியாமை இருளை விலக்கி, அறிவை பெருக்குவதோடு, நமது வீடும் புனிதமடைகிறது. நமது வாழ்வின் பாவங்களை துடைப்பது மட்டுமின்றி, வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது. மனதின்  தீய எண்ணங்களை அழிப்பதால் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இத்தனை சிறப்பு  மிகுந்த தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தன்று புத்தாடை அணிவதையும், பட்டாசுகள் வெடிப்பதையும், இனிப்புக்கள் பரிமாறுவதையும்  வழக்கமாக வைத்துள்ளோம். 

இந்தமுறை தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு பல வரலாறுகளும், பல புராணக் கதைகளும் உண்டு. கிருஷ்ண பெருமான் நரகாசுரன் எனும் அரக்கனை அழித்த தினம் என்றும், சிவ பெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கெளரி விரத நாள் என்றும், லட்சுமிக்கு உகந்த நாள் என்றும் பல சிறப்புக்கள் பெற்றதாக இந்த நாள் இருக்கிறது.  தீபாவளி தினத்தன்று மகாலட்சுமியை வணங்கி, சகல செல்வ சம்பத்துக்களையும் குபேரர் பெற்றதாக ஐதீகம். இதனால் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்து, வழிபட்டு வணங்கி வந்தால், அவளின் பரிபூரண அருளை பெற முடியும்.

அதிர்ஷ்டம் போகலாம்.. அஷ்டலஷ்மி போகலாமா?

பொதுவாக அமாவாசை அன்று தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கி கிடக்கும் அந்த தினத்தன்று, வீடுதோறும் விளக்கேற்றி விழாவாக கொண்டாட வேண்டும் என்ற முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக அமாவாசை, தீபாவளி இணைந்தே வருவதால் இந்த ஆண்டு ஐப்பசி 7 ஆம் தேதி ஆங்கில மாதம் அக்டோபர் 24 ம் தேதி  திங்கட்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் 24 ம் தேதி மாலை 5.39 வரை சதுர்த்தசி திதியும், மாலை 5.39 துவங்கி, அக்டோபர் 25 ம் தேதி மாலை 5.02 வரை அமாவாசை திதியம் தொடர்கிறது.

தீபாவளி பண்டிகைக்கு எப்படி பல வரலாறுகள் உள்ளதோ அதேபோன்று தான் இந்த பண்டிகையை கொண்டாடும் முறையும் பல வகையில் உள்ளது.தமிழகத்தில் தீபாவளி கொண்டாடும் முறை குறித்து அனைவரும் அறிந்ததே. அதுவே வட இந்தியாவில் அக்டோபர் 22 ம் தேதி துவங்கி, அக்டோபர் 26 ம் தேதி வரை 5 நாள் விழாவாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

Deepavali : தீபாவளி கொண்டாட இத்தனை காரணங்களா?

அக்டோபர் 22 ம் தேதி திரியோதசி திதி அன்று டாந்திரா என்ற பெயரில் தங்க நகைகள் உள்ளிட்ட நகைகள் வாங்கும் நாளாக கொண்டாடுவார்கள். அக்டோபர் 23 ம் தேதி சதுர்தசி திதியன்று சோட்டி தீபாவளி என்ற பெயரில் வீடுகளை அலங்காரம் செய்யவும், ரங்கோலிகள் வரைதல் போன்றவையும் நடைபெறும். அக்டோபர் 24ம் தேதி அமாவாசை அன்று தீப திருநாளாகவும், லட்சுமி பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். அக்டோபர் 25 ம் தேதி சூர்ய கிரகணம் என்பதால் அதற்கு அடுத்த நாளான  அக்டோபர் 26 ம் தேதி பிரதமை திதியன்று கோவர்த்தன பூஜை செய்து, அன்று மாலை துவிதியை திதியில் பாய் தூஜ் என்ற பெயரில் சகோதர - சகோதரிகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.

இத்தனை புராணக்கதைகள் இருப்பினும், இத்தனை கொண்டாட்ட முறைகள் இருப்பினும் தீபாவளி பண்டிகை பொதுவாக ஒற்றுமையின் வெளிப்பாடாகவே கொண்டாடப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios