சில குறிப்பிட்ட நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு அடைப்பு இருக்கும் பெரியவர்கள் கூறுவது உண்டு. அடைப்பு என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன?
இந்த உலகில் ஜீவராசிகளாக பிறந்த அனைவருமே என்றாவது ஒருநாள் மரணத்தை தழுவியே தீர வேண்டும் என்பது விதி. நம் கலாச்சாரத்தில் பிறப்பு எவ்வளவு முக்கியமோ அதேபோல் இறப்புக்கும் சில நியதிகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. ஒருவர் இறந்த பிறகு அவரின் ஆத்மா மேற்கொள்ளும் மோட்ச பயணமானது சில ஜோதிட ரீதியான காரணங்களால் பாதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. இதில் முக்கியமானது அடைப்பு அல்லது தனிஷ்டா பஞ்சமி எனப்படும் நிலை. இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? அதற்கான சடங்கு முறைகள் என்ன? என்று குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். அவர் கூறியுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரு வழிகளில் மோட்சத்தை அடையும் ஆத்மா
ஒரு மனிதன் இறந்த பின்னர் அவரது ஆத்மா இரண்டு வழிகளில் மேல் உலகத்தை அடையும். ஒன்று அட்சாதி மார்க்கம், மற்றொன்று தூமாதி மார்க்கம். அட்சஸ் என்றால் ஒளி என்று பொருள். தூமம் என்றால் இருள் என்று பொருள். இந்த இரண்டு வழிகளில் மேல் உலகிற்கு செல்லும் அந்த ஆத்மா அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப இடங்களைப் பிடித்து, அதன் பலன்களை அனுபவித்து மீண்டும் பூவுலகிற்கு திரும்பி பிறப்பெடுக்கும். சில நட்சத்திரங்களில் இருந்த ஆத்மாக்கள் மேல் உலகிற்கு செல்லும் பொழுது தடைகள் ஏற்படுகிறது. இதைத் தான் நாம் அடைப்பு என்கிறோம். அதாவது ஆன்மா உடலை விட்டு பிரிந்து மேல் உலகிற்கு செல்லும் வழியில் அங்கு ஏற்படும் தடையால், மேல் உலகத்திற்கு செல்ல முடியாமலும், பூமிக்கு திரும்ப முடியாமலும் நடுவில் மாட்டிக்கொள்ளும் நிலையை தான் அடைப்பு என்கிறோம்.
குறிப்பிட்ட காலம் கதவுகள் அடைக்கப்படும்
குறிப்பிட்ட 13 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இந்த அடைப்பு ஏற்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்கள் மேல் உலகை நோக்கி செல்லும் பொழுது குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு கதவுகள் அடைக்கப்படுகிறது. அடைப்பு என்பதற்கு உதாரணமாக விசாவை சொல்லலாம். ஒரு நாட்டிலிருந்து, வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது விசாவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த நாட்டிற்க்குள் செல்ல முடியாமலும், நமது நாட்டிற்கும் திரும்ப முடியாமலும் நடுவில் மாட்டிக் கொள்வது போன்ற நிலை தான் அடைப்பு எனப்படுகிறது. விசா பிரச்சனை முடிந்த பிறகு காலம் தாழ்த்தி வெளிநாடுகளுக்கு செல்வது போல அடைப்பு காலம் முடிந்த பின்னரே மேலோகத்திற்கு அந்த ஆன்மா பயணப்படுகிறது.
நட்சத்திரங்களும், அடைப்பு காலமும்
மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் 13 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு அடைப்பு ஏற்படுகிறது. அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாத காலமும், ரோகிணி நட்சத்திரத்தில் இருந்தவர்களுக்கு நான்கு மாத காலமும், கார்த்திகை உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாத காலமும், சித்திரை, மிருகசீரிஷம், புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாத காலமும் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டால் இறந்தவரின் ஆன்மா குறிப்பிட்ட காலம் வரை பூமியிலேயே உலவும் என்றும், இது மீண்டும் உடலுக்குள் வர ஆவல் கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது. அடைப்பு நட்சத்திரத்தில் மரணம் நிகழ்ந்தால் அந்த குடும்பத்தில் தொடர்ச்சியான சில சிக்கல்கள், துரதிஷ்டங்கள் ஏற்படலாம். இது துர்தேவதையின் தாக்கமாகவோ அல்லது கர்ம வினையின் வெளிப்பாடாகவோ கருதப்படுகிறது.
அடைப்பு உள்ளவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
முந்தைய காலங்களில் அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களின் உடலை வீட்டின் முன் பக்கம் வழியாக எடுத்துச் செல்லாமல் பின்பக்கம் வழியாக சுவரை எடுத்துச் சென்றதாகவும், கூரையை பிரித்து எடுத்துச் சென்றதாகவும் பெரியோர்கள் கூறுவது உண்டு. ஆனால் தற்போதைய காலத்தில் இந்த நடைமுறைகள் சாத்தியமில்லை. எனவே அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு வீட்டில் சிறிய வீடு போன்ற அமைப்பை அமைக்க வேண்டும். ஐந்து செங்கல்களை எடுத்துக்கொண்டு இறந்து போனவர்கள் உடல் வைத்திருந்த இடத்தில் வீடு போல் அமைக்க வேண்டும். அதற்குள் ஒரு அகல் தீபம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அடைப்பு நாள் முடியும் வரை இந்த வீடு போன்ற அமைப்புக்குள் தெற்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். ஆறு மாத காலம் அடைப்பிருந்தால், அத்தனை நாட்களும் ஒரு நாள் கூட தவறவிடாமல் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். வெண்கல கிண்ணம் ஒன்றை வைத்து அதில் நல்லெண்ணெய் நிரப்பி அதையும் அந்த செங்கல் வீட்டிற்கு அருகில் வைத்து வழிபட வேண்டும்.
ஒருநாள் கூட தவறாமல் விளக்கேற்ற வேண்டும்
தினமும் ஒரு சொம்பு வைத்து, அதில் சுத்தமான நீர் நிரப்பி நம்மால் முடிந்த நெய்வேத்யத்தை படைத்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இறந்தவர்களின் ஆத்மா முக்தியடையாமல் நடுவழியில் அன்ன ஆகாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு நீரும், உணவும் தந்து பராமரிக்க வேண்டியது அவசியம். எப்படி நாம் வெளிநாடுகளில் விசா பிரச்சனையால் அங்கு மாட்டிக்கொண்டால், பிரச்சனை முடியும் வரை அவர்கள் உணவும் நீரும் தந்து நம்மை பராமரிக்கிறார்களோ அதுபோல நாமும் நடுவழியில் நின்று கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு உணவும் நீரும் தரவேண்டும். எளிமையான உணவுகளை நெய்வேத்யம் படைத்தால் போதும். இதில் எந்த நிர்பந்தமும் கிடையாது. தினமும் கற்பூர தீபாரதனை காட்ட வேண்டும். இந்த தீப ஆராத்தியை தொட்டு கும்பிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அதை ஒரு மூங்கில் கூடை போட்டு மூடி வைத்து விட வேண்டும்.
மாலை 6 மணி சிறந்த நேரமாகும்
இந்த வழிபாடை பெண்கள் கூட செய்யலாம். மாதவிடாய் காலங்களில் கூட இந்த வழிபாடுகளை மேற்கொள்ளலாம். ஆனால் மாதவிடாய் காலங்களில் பெண்கள் இதை செய்ய சங்கடப்பட்டால் ஆண்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இந்த பூஜையை செய்யலாம். தினமும் மாலை 6 மணிக்கு விளக்கேற்ற முடியாதவர்கள் காலை விளக்கேற்றி வழிபடலாம். ஆனால் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதே நியதி. மாலை தீபம் ஏற்றும் போது நிலைக்கதவிற்கு முன் வெளிப்பக்கம் பார்த்தவாறு அகல் விளக்கு ஒன்றை ஏற்ற வேண்டும். அதில் இலுப்பை எண்ணையும், விளக்கெண்ணையும் சேர்த்து தீபமிட வேண்டும். அடைப்பு காலம் முடிந்த பிறகு மீண்டும் அந்த திதி வரும் வரை இந்த வழிபாட்டு முறையை தினமும் தவறாமல் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தல் போன்றவை கூடாது.
அடைப்பு பற்றி தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
அடைப்பு காலம் முடிந்த பின்னர் செங்கல்களால் கட்டிய வீட்டை பிரித்து, வீட்டிற்கு வெளியில் போட்டு விடலாம். தினமும் நீர் வைத்திருந்த சொம்பை தானம் செய்துவிடலாம். வெண்கல கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்த நல்லெண்ணையையும் தானம் செய்துவிடலாம். அடைப்பு காலத்திற்கு பின்னர் இந்த வழிபாடை செய்யக்கூடாது. சிலருக்கு அடைப்பு இருப்பதே தெரியாமல் இருந்து, காலம் தாழ்த்தி அடைப்பு பற்றி தெரிய வந்தால் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடாது. இறந்த பின்னர் அடைப்பு காலத்தில் மட்டுமே இந்த வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை அடைப்பு காலத்தின் நடுவில் அடைப்பு பற்றி தெரிய வந்தால் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளலாம். அடைப்பு காலத்தில் இந்த பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் அமாவாசை என்றாவது விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அடைப்பு தோஷத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
அடைப்பு காலத்தில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே தேதி குறித்து இருந்தால் அந்த நிகழ்ச்சிகளை தாராளமாக செய்யலாம். அடைப்பு நட்சத்திரத்தில் ஒருவர் இறந்திருந்தால் மேற்கூறிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றி வழிபாடுகளை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த குடும்பத்தில் வளர்ச்சி இருக்காது, திருமணம் தடைபடலாம், குழந்தை பிறப்புகள் தள்ளிப் போகலாம். எனவே இறந்தவர்களின் நேரம், திதி, வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு மறக்காமல் இந்த பரிகாரங்களை செய்யுங்கள். இந்த சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் தனிப்பட்ட மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. இவை இறந்தவரின் ஆத்மாவுக்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அமைதியை தரக்கூடியதாக அமையும் என்று தேச மங்கையர்கரசி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
