திருப்பதிக்கு போகப் போறீங்களா? கண்டிப்பா இந்த புதிய கட்டுப்பாடுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

திருமலையில் உள்ள இரண்டு மலையேற்றப் பாதைகளில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பக்தர்கள் செல்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Thirupathi devasthanam imposes restrictions on pilgrims taking footpath

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சில நேரடியாக திருப்பதிக்கு சென்றாலும், சில பயணிகள் கீழ் திருப்பதியில் இருந்து பாதையாத்திரையாக மேல் திருப்பதிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சில பக்தர்கள், குறிப்பாக குழந்தைகள் மீது வன விலங்குகள் தாக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து, திருமலையில் உள்ள இரண்டு மலையேற்றப் பாதைகளில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பக்தர்கள் செல்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திருமலைக்கு அலிபிரி பாதசாரி பாதையில் 6 வயது சிறுமி ஒரு காட்டு விலங்கு தாக்குதலை எதிர்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மலையேற அனுமதிக்கப்படுவார்கள். காட் ரோடுகளில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வரும். பக்தர்களின் பாதுகாப்பிற்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வனத்துறை, உள்ளூர் போலீஸ் மற்றும் அதன் சொந்த பாதுகாப்பு பிரிவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் ஒருங்கிணைத்து வருகிறது. அதன் தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி, TTD நிர்வாக அதிகாரி AV தர்மா ரெட்டியுடன் சேர்ந்து, பக்தர்கள் மற்றும் வன விலங்குகளுக்கு இடையே மேலும் மோதல்களைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து வியூகம் வகுக்கும் தொடர் கூட்டங்களை நடத்தினார்.

சிறுத்தையை பிடிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மாநில வனத்துறை தனி முகாம் ஒன்றை அமைத்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொறிகள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7வது மைல் பாயிண்ட் மற்றும் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு இடையே உள்ள உயர் எச்சரிக்கை மண்டலத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைகளை பிடிக்க இரண்டு கூண்டுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் கூண்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தலைமை வனப் பாதுகாவலர் நாகேஸ்வர ராவ் தெரிவித்தார்.

வனவிலங்குகள் மனித மோதலை தடுக்கும் முயற்சியில், கோவிந்தா நாமங்களை கோஷமிட்டு பக்தர்கள் குழுக்களாக மலையேறுமாறு TTD பரிந்துரைத்துள்ளது. வன விலங்குகள் சாலையை நெருங்க விடாமல் ஒலி எழுப்பும். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios