இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்.. உலகளவில் புதிய கொடிய நோய் பரவக்கூடும்.. பஞ்சாங்கத்தில் கணிப்பு..
இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் உலகளவில் புதிய கொடிய நோய் பரவக்கூடும் என்றும் கோயில் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. .
தமிழ் புத்தாண்டு தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டை நேற்று முக்கிய கோவில்களில் சிறப்பு அபிஷாக ஆராதனைகள் நடைபெற்றன. அந்த வகையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து சுவாமி பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.மேலும் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் ரத வீதியில் சுவாமி, அம்மன் ஊர்வலம் வந்து கோயிலுக்கு திரும்பினர். அங்கு கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார். அதில் “ இந்தியாவில் அதிக மழை பெய்யும் எனவும் இதனால் விவசாயம் செழிக்கும் எனவும் அதே நேரம் வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு பல ந.ல திட்டங்களை மக்களுக்கு வழங்கும். இந்தியர்கள் சித்தா, ஆயுர்வேத மருத்துவ துறையில் சாதனை படைப்பார்கள். புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதிப்பார்கள். இதன் மூலம் இந்தியா உலக அரங்கில் சாதனை படைக்கும். அரசியலில் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் மேலும் விரிவடையும்.
இந்திய விளையாட்டு வீரர்கள் மேலும் சாதனை படைப்பார்கள். போதை பொருள் புழக்கம் மேலும் அதிகரிக்கும். கல்வி கட்டணம் உயரும். அதே நேரம் கல்வியின் சுமையும் குறையும். எல்லையில் போர் பதற்றம் அதிகரிக்கும். முன்னாள் அரசியல் தலைவர்களுக்கு பிரச்சனை ஏற்படும்.
அரசியல் கூட்டணி மாறுபடும், சில அரசியல்வாதிகளுக்கு பிரச்சனை ஏற்படலாம். வரிகள் உயர்த்தப்படும். குறிப்பாக மின் கட்டணம் அதிகரிக்கும். உலகளவில் புதிய கொடிய நோய் பரவக்கூடும்..” என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்தாக கோயில் குருகள் தெரிவித்தார். அப்போது கோயில் செயல் அலுவலர் முத்துசாமி, மேலாளர் பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்..