மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலில் உள்ள 18-ஆம் படி கருப்பண்ண சுவாமி கோயிலின் கதவுகள் சமீபத்தில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்த கதவுகளுக்கு பின்னால் உள்ள ரகசியம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அழகர் மலை

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் மூலவராக பரமசாமியும், உற்சவரராக ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகரும் அருள் பாலிக்கின்றனர். இந்த திருத்தலத்தில் காவல் தெய்வமாக 18-ம் படி கருப்பண்ண சுவாமி அமைந்திருக்கிறார். இவரது சன்னதி கோயிலில் ராஜகோபுர வாசலில் மூடப்பட்ட கதவுகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாத பௌர்ணமி அன்று சுமார் ஐந்து நிமிடங்கள் மற்றும் இந்த கதவுகள் திறக்கப்பட்டு, தீபாரதனை காட்டப்படுகிறது. இந்த நிகழ்வானது பக்தர்களிடையே ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இந்த மூடப்பட்ட கதவுகளுக்கு பூஜை நடத்தப்படுவதற்கு பின்னால் வரலாறும், ரகசியமும் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கருப்பண்ண சுவாமி தோற்றம்

பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியின் தோற்றத்திற்கு பின்னால் சுவாரஸ்யமான புராணக்கதை ஒன்று உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவன் அழகர் கோயிலுக்கு வந்தான். கள்ளழகரின் அழகையும், அவரது தங்க ஆபரணங்களை கண்ட மயங்கிய அவன் கள்ளழகரை கேரளத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினான். இதற்காக 18 மந்திரவாதிகளை அனுப்பி அவர்களுக்கு காவலாக கருப்பண்ண சுவாமியையும் அனுப்பினான். கேரளத்தின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமி வெள்ளைக் குதிரையில் 18 மந்திரவாதிகளுக்கு காவலாக அழகர் மலைக்கு வந்து சேர்ந்தார். அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகரை கண்ட கருப்பண்ண சுவாமி அவரது அழகில் மயங்கினார். மந்திரவாதிகள் வந்திருப்பதை இறைவன் கோயில் பட்டருக்கு கனவில் தோன்றி எச்சரித்தார்.

கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது

அதன்படி கோவில் பட்டர் பொங்கலில் அதிக அளவு மிளகு கலந்து அதை மந்திரவாதிகள் உண்ணும் படி செய்தார். மிளகின் காரத்தால் கண்ணீர் வடித்த மந்திரவாதிகளின் மந்திர மை அழிந்து அருவமாய் இருந்த அவர்களது உருவம் வெளிவரத் தொடங்கியது. மந்திரவாதிகளிடமிருந்து தங்களை காக்கும்படி அப்பகுதி மக்கள் கருப்பண்ண சுவாமியை வேண்டி வழிபட, அவர்களின் பக்திக்கு கட்டுப்பட்ட கருப்பண்ண சுவாமி, யாருக்கு காவல் வந்தாரோ அவர்களையே கொன்றார். கொள்ளையடிக்க வந்த 18 கொள்ளையர்களையும் கோவில் வாசலில் 18 படிகளில் புதைத்தார். கருப்பண்ண சாமிக்கு அருள்புரிந்த கள்ளழகர், “இனி இந்த மலையையும், என்னையும் காவல் காப்பாயாக” என்று வரம் அருளினார். அந்த நாள் முதல் இன்று வரை 18 படிகளின் மேல் வீற்றிருந்து கருப்பசாமி அழகர் மலையையும், கள்ளழகருக்கும் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார். இந்த 18 படிகள் மந்திரவாதிகளில் உருவாகவும், கதவுகள் கருப்பண்ண சுவாமியாகவும் வழிபடப்படுகிறது.

5 நிமிடம் திறக்கப்படும் கதவுகள்

கருப்பண்ண சுவாமி சன்னதி அழகர் கோவிலில் ராஜகோபுர கதவுகளில் அமைந்துள்ளது. கருப்பண்ண சுவாமிக்கு உருவம் கிடையாது. மூடப்பட்ட கதவுகளே கருப்பண்ண சுவாமியாக வழிபடப்படுகிறது. இந்த கதவுகள் வருடத்தின் அனைத்து நாட்களும் மூடப்பட்டிருக்கும். ஆடி பௌர்ணமி அன்று 5 நிமிடத்திற்கு திறக்கப்பட்டு, 18 படிகளுக்கு தீபாரதனை செய்யப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு 18 மந்திரவாதிகளை கொன்று புதைத்த இடம் என்பதால் இந்த வாசல் தீட்டுப்பட்டதாக கருதப்பட்டு அழகரோ, பக்தர்களோ இந்த வழியாக செல்வது மரபு கிடையாது. கருப்பண்ண சுவாமி இந்த கதவுகளில் வீற்றிருந்து கோயிலை காக்கிறார் என்று நம்பப்படுகிறது. ஆடி மாத பௌர்ணமி தினத்தில் இந்த கதவுகள் திறக்கப்பட்டு குடம் குடமாக சந்தனம் பூசப்படுகிறது. கதவுகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரிய அருவாள்கள், ஈட்டிகள், கம்புகள் படிகளில் சாற்றப்படுகின்றன.

அநீதி செய்பவர்களுக்கு தண்டனை

18 படிகளில் விளக்குகள், சூடங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்படுகிறது. இந்த நிகழ்வு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவது வழக்கம். சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்குச் செல்லும் பொழுதும், அழகர் மலை திரும்பும் பொழுதும் அவரது நகைகள் கருப்பண்ண சுவாமி சன்னதி முன்னாள் கணக்கிடப்பட்டு பட்டியல் படிக்கப்படுகிறது. இது கருப்பசாமி கோயில் நகைகளை பாதுகாப்பவர் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அழகர் கோயில் மூடப்பட்ட பிறகு கதவின் சாவி கருப்பண்ண சுவாமி சன்னதியில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை பட்டர் அதை எடுத்து கோயிலை திறப்பது வழக்கம். கருப்பண்ண சுவாமி அநீதி செய்பவர்களை தண்டிப்பார் என்றும், நியாயம் கேட்பவர்களுக்கு நீதி வழங்குவார் என்று நம்பிக்கை உள்ளது. பலர் தங்கள் பிரச்சனைகளை கருப்பசாமி முன்பு முறையிட்டு தீர்வு காண்கின்றனர். கிடா வெட்டுவது, அன்னதானம் செய்வது போன்ற செயல்களிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.

அழகர் மலையின் காவல் தெய்வம்

மந்திரவாதிகளுக்கு காவலாக வந்த கருப்பண்ண சுவாமி, அந்த மந்திரவாதிகளையே 18 படிகளாக மாற்றி அதன் மேல் வீற்றிருந்து அழகர் மலையை காத்து வருகிறார். இந்த சன்னதி ஒரு காவல் தெய்வத்தின் பக்தி, அர்பணிப்பு மற்றும் புராண வரலாற்றின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் இந்த கதவுகளும், அதற்கு நடத்தப்படும் பூஜைகளும் கருப்பண்ண சுவாமி அருவமாக இருந்து காவல் புரிவதை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த கதவுகளுக்கு பூஜை செய்யப்படுவதன் ரகசியம் கருப்பண்ண சுவாமியின் அருவமான இருப்பையும், அவரது காவல் பணியையும் பக்தர்களுக்கு உணர்த்துகிறது.