இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி '2' முறை வருது.. அதுக்கு இப்படி ஒரு விசேஷமான காரணமா?
Vaikunta Ekadashi 2025 : 2025ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி ஏன் இரண்டு முறை வருகிறது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறை மார்கழியில் வருகின்ற வைகுண்ட ஏகாதேசி ரொம்ப சிறப்பு மிகுந்தது. ஏனென்றால் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்து பெருமாள் கோவில்களுக்கு சென்று சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வை கண்டு மனங்குளிர்ந்து வேண்டிக் கொள்வார்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவெல்லாம் கண் விழித்து பெருமாளின் திருநாமத்தை துதிப்பார்கள். அதற்கு மறுநாள் துவாதசி தினம் அன்று ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட்டு வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
எப்போதும் வைகுண்ட ஏகாதசி ஆண்டிற்கு ஒரு முறை தான் வருவது வழக்கம். எப்போதாவது ஒரு ஆண்டில் வைகுண்ட ஏகாதசியே இல்லாமல் இருக்கும். இதற்கு மாறாக சில வருடங்களில் இரண்டு முறை கூட வைகுண்ட ஏகாதசி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் வைகுண்ட ஏகாதசி இல்லை. இந்த ஆண்டு அதை ஈடுகட்டும் வகையில் இரண்டு முறை வைகுண்ட ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டின் தொடக்கத்திலும், இறுதியிலும் என இரண்டு முறை வைகுண்ட ஏகாதசி வருகிறது. முதலாவது வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ஆம் தேதி அன்றும் இரண்டாவது வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி அன்றும் வரவிருக்கின்றன. எப்படி ஒரே ஆண்டில் இரண்டு முறை வர முடியும் என உங்களுக்கு தோன்றுகிறதா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம் .
இதையும் படிங்க: வைகுண்ட ஏகதாசி 2025 எப்போது வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும் பணம் பெருகும்.. முழு விவரம்
பெரும்பாலும் மார்கழி மாதத்தின் இடையில் தான் வைகுண்ட ஏகாதசி வருவது வழக்கம். மார்கழி மாத வளர்பிறையைதான் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுவோம். இதனை மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பார்கள். 2023 ஆம் ஆண்டில் மார்கழி மாதம் தொடங்கும் போதே வைகுண்ட ஏகாதசி வந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் மார்கழியில் வர வேண்டிய வைகுண்ட ஏகாதசி தள்ளிப் போய்விட்டது. போன வருடம் லீப் ஆண்டு என்பதால் வைகுண்ட ஏகாததி மார்கழி மாத பிற்பகுதிக்கு வந்துவிட்டது. தமிழ் மாதத்தின் படி வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் பிற்பகுதிக்கு வந்தது. அதுவே ஆங்கில மாதத்தில் அடுத்தாண்டுக்கு வந்துவிட்டது.
லீப் வருடத்தின் கால சுழற்சியின் காரணமாக வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் இறுதிக்கு வந்த காரணத்தால் 2024 ஆம் ஆண்டில் அதனை கடைபிடிக்க முடியவில்லை. அதுவே இப்போது 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டில் இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வரவிருக்கின்றன.
இதையும் படிங்க: பெண்கள் இரவு தலை குளிக்கக் கூடாதுனு சாஸ்திரம் சொல்றது எதுக்கு தெரியுமா?
இந்த ஆண்டின் விசேஷமான விரத நாளில் வைகுண்ட ஏகாதசி தவிர்க்க முடியாதது. வருடத்தின் முதலில் வரும் முக்கியமான விரத நாளாகவும், வருடத்தின் இறுதியில் வரும் சிறப்பான விரத நாளாகவும் வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டை சிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாவிட்டாலும் ஆண்டில் ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டாலும் ஆண்டு முழுக்க அந்த பலனை அனுபவிக்க முடியும். இந்த வருடம் இரண்டு முறை வைகுண்ட ஏகாதசி வருவதால் இரண்டு விரதங்கள் இருப்பது உங்களுக்கு இரட்டிப்பான நன்மைகளை அள்ளி தரும். பெருமாளுடைய ஆசிர்வாதத்தை பெற தவறாமல் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பை காண செல்லுங்கள். உங்களால் விரதம் இருக்க முடிந்தால் கட்டாயம் கடைப்பிடியுங்கள். பெருமாள் உங்களோடு இருப்பார்!