மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது. ஆனால், அன்னைக்கு 'மீனாட்சி' என்பது உண்மையான பெயரல்ல என்பது பலரும் அறியாத ரகசியம். அவருக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது, யார் சூட்டியது என்பதற்குப் பின்னால் வியக்கவைக்கும் ஆன்மீகக் காரணங்கள் உள்ளன. இக்கோவிலில் மறைந்துள்ள இதுபோன்ற அதிசயங்களும் மர்மங்களும் நம்மைப் பிரமிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் தான். ஆனால், 'மீனாட்சி' என்பது அவரின் உண்மையான பெயர் கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியானால் மீனாட்சி என்ற பெயரை யார், எதற்காக அன்னைக்கு சூட்டினார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் பக்கங்களிலும், புராணங்களின் ஆழத்திலும் தேடினால் மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் மற்றும் அவர் குறித்த வியக்கத்தக்க தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
மீனாட்சி அம்மன் தோன்றிய வரலாறு :
பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத பாண்டிய மன்னன் மலையத்துவஜ பாண்டியனுக்கும், காஞ்சனமாலைக்கும் மகளாக யாக குண்டத்தில் இருந்து தோன்றியவள் தான் அன்னை மீனாட்சி. யாக தீயில் இருந்து மூன்று வயது சிறுமியாக மூன்று மார்பகங்களுடன் தோன்றினார். இதனால் கவலையுற்ற மன்னனிடம், "இவள் எப்போது தன் கணவனைச் சந்திக்கிறாளோ, அப்போது மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்" என அசரீரி ஒலித்தது. மீனாட்சிக்கு தடாதகை என பெயர் சூட்டும் படி சிவ பெருமானே திருவாய் மொழிந்தார். தடாதகை என்றால் மாறுபட்ட பெண் என்று பொருள்.
பெயருக்கு ஏற்றபடி அனைத்திலும் மாறுபட்ட தெய்வீக குழந்தையான தடாதகை, வீரத்திலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்று, உலகமே போற்றும் வீரமங்கையாக வலம் வந்தாள். அனைத்து உலகையும் வெற்றி கொள்ள புறப்பட்ட அவர், இந்திரன் உட்பட அனைத்து தேவர்களையும் வென்று, இறுதியில் சிவபெருமானை எதிர்த்துப் போரிட கைலாயம் சென்றார். அங்கே சிவபெருமானைக் கண்ட மாத்திரத்தில், அவருக்கு இருந்த மூன்றாவது மார்பகம் மறைந்தது. அப்போது, தான் மணக்க வேண்டியவர் இவரே என்பதை உணர்ந்தார் தடாதகை.
மீனாட்சி - பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் :

'மீன் போன்ற கண்களை உடையவள்' என்பது மீனாட்சி என்பதன் பொதுவான பொருள். இந்த பெயரை அவளுக்கு சூட்டியவர் வேறு யாரும் அல்ல. மீனாட்சி அம்மனின் கணவரான சிவபெருமான் தான், அன்னைக்கு இந்த பெயரை சூட்டியதாக சொல்லப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுக்களில் 1898ம் ஆண்டிற்கு பிறகு தான் மீனாட்சி சொக்கநாதர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்பு வரை தடாதகை நாச்சியார் திருக்கோவில் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மீனாட்சி என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மை பலருக்குத் தெரிவதில்லை.
மீன்கள் தன் முட்டைகளை இமைக்காத கண்களால் பார்த்தே குஞ்சு பொரிக்க வைக்கும் (பார்வை தீட்சை).அதேபோல், தன் பக்தர்களை ஒருமுறை பார்த்தே அவர்களின் கர்ம வினைகளைத் தீர்த்து அருள் புரிபவள் என்பதால் இவருக்கு மீனாட்சி என்று பெயர் வந்தது. இதற்குப் பின்னாளில் சமஸ்கிருதத்தில் மரகதவல்லி மற்றும் அங்கயற்கண்ணி என்ற பெயர்களும் சூட்டப்பட்டன. இந்த பெயர்களும் அன்னையின் பார்வையின் பேராற்றலை புகழ்ந்து போற்றுவதாகும்.
பலரும் அறியாத 5 சுவாரஸ்யமான தகவல்கள் :
1. பச்சை நிறத்தின் பின்னணி: மீனாட்சி அம்மன் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறார்? பச்சை நிறம் என்பது 'புதன்' கிரகத்தைக் குறிக்கும். புதன் அறிவிற்கும், பேச்சுத் திறனுக்கும் அதிபதி. மதுரையில் மீனாட்சி ஆளுகை செய்வதால், அங்கு கல்விக்கும் கலைகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். அதனால் தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இன்றும் வரலாற்றில் போற்றப்படுகிறது.
2. கையில் இருக்கும் கிளி: மீனாட்சியின் கையில் இருக்கும் கிளி, பக்தர்களின் வேண்டுதல்களை அப்படியே கேட்டுக்கொண்டு போய் அம்மனின் காதில் ஓதுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கிளி என்பது வேதங்களின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் மீனாட்சி அம்மன் கோவில், பெண் தெய்வத்தை முதன்மையாக போற்றும் ஒரே சிவ தலமாகும்.

3. அரசியல் அதிகாரம்: இன்றும் மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது, மீனாட்சி அம்மனுக்கு மதுரையின் அரசியாக முடிசூட்டும் பட்டாபிஷேக விழா நடத்தப்படும். இந்த விழாவின் போது அம்பிகையின் கரங்களில் செங்கோல் வழங்கப்படுகிறது. அதாவது, மதுரையின் உண்மையான மகாராணி மீனாட்சி தான்; சொக்கநாதர் (சிவன்) அவருக்குத் துணையாக இருக்கும் இளவரசர் மட்டுமே.
4. பள்ளியறை பூஜை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் இரவு நடைபெறும் 'பள்ளியறை பூஜை' மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு நாளும் இரவு பூஜையின் முடிவில், மீனாட்சி அம்மனின் சந்நிதியிலிருந்து அன்னையின் பாதுகைகள் ஒரு தங்கப் பல்லக்கில் வைக்கப்பட்டு, ஊர்வலமாகச் சென்று சுந்தரேஸ்வரர் (சொக்கநாதர்) சந்நிதியில் உள்ள பள்ளியறைக்குக் கொண்டு செல்லப்படும்.
5. ஆங்கலேயர் அளித்த நகைகள் : மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போதும், பட்டாபிஷேகத்தின் போதும் அம்மனுக்கு வைர கிரீடமும், விலை மதிப்பில்லாத தங்க ஆபரணங்களும் அணிவிக்கப்படுகின்றன. தங்க செருப்புகளும் அணிவிக்கப்படுகின்றன. இது ஆங்கிலேயர் காலத்தில் மீனாட்சி அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதாகும். இடி விழுந்து கட்டிடம் இடிய போகும் கடைசி நிமிடத்தில் தன்னை காப்பாற்ற ஓடி வந்த அன்னை மீனாட்சியின் பாதங்களுக்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அப்போது மதுரையை ஆண்ட ஆங்கிலேயர் காணிக்கையாக அளித்த தங்க பாதுகை இன்றும் அன்னை மீனாட்சிக்கு அணிவிக்கப்படுகிறது.


