Asianet News TamilAsianet News Tamil

புனித வெள்ளியை ஏன் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்? அன்றைய தினம் இயேசு செய்த தியாகம்!!

good friday 2023 | விண்ணில் இருந்து மண்ணுலகம் வந்ததாக நம்பப்படும் இயேசு கிறிஸ்து, மனிதரின் பாவங்களுக்காக தன்னுயிரையே தியாகம் செய்ததை நினைவுகூறும் நாள் தான் புனித வெள்ளி. 

good friday 2023 purpose of the day
Author
First Published Apr 4, 2023, 11:40 AM IST | Last Updated Apr 4, 2023, 11:48 AM IST

தவக்காலத்தில் இயேசுவின் சிலுவை பாடுகளையும், அவருடைய மரணத்தையும் நினைவு கூறுவார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. ஏப்ரல் 9ஆம் தேதி ஈஸ்டர் அன்று தவக்காலம் நிறைவுறும். இந்த நாள்களில் கிறிஸ்தவர்கள் உலக இச்சைகளில் இருந்து விலகி நோன்பு இருப்பார்கள். மக்கள் மனமாற்றம் அடைந்து இறைவனிடம் திரும்புவது தான் தவக்காலத்தின் நோக்கம். உதவுதல், அன்பு செய்வது, மன்னிப்பது போன்றவை இந்த தவக்காலத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை விஷயங்கள். தவக்காலத்தின் இறுதி வாரத்தில் தான் புனித வெள்ளி அனுசரிக்கப்படும்.

இந்தாண்டு புனித வெள்ளி ஏப்ரல் 7ஆம் தேதி அன்று வருகிறது. எப்போதும் ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை தான் புனித வெள்ளி என்பார்கள். புனித வெள்ளி என்பது, தவக்காலத்தின் இறுதி வாரமான புனித வாரத்தின் முக்கிய நாளாக கருதப்படுகிறது. புனித வாரத்தின் முதல் நாள் குருத்து ஞாயிறு (palm Sunday). இந்த ஞாயிரை தொடர்ந்து புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி, அதன் பின்னர் வருவது இயேசு உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரல் 9). இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். 

புனித வெள்ளி 

இயேசு கிறிஸ்து மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட நாள் "புனித வெள்ளி". அவர் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் மனிதகுலத்தின் பாவங்களுக்காக மரணத்தை தழுவினார் என்கிறது பைபிள். இந்த நாளில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாவங்களுக்காக கிறிஸ்துவின் தன்னுயிரை தியாகம் செய்ததை நினைத்து மனம் வருந்து ஜெபிக்கிறார்கள். இயேசுவின் பாடுகளை நினைவுகூருகிறார்கள். 

புனித வெள்ளி என்றால் என்ன?

கத்தோலிக்கர்கள், சி.எஸ்.ஐ., பெந்தகோஸ்தே சபையினர் ஆகிய அனைத்து கிறிஸ்தவர்களும் இதை சோகமான நாளாக தான் கடைபிடிப்பார்கள். இது இயேசுவின் தியாகத்தினை நினைவு கூறும் நாள். இந்த நாளில் எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும். சிலர் நோன்பு நோற்கிறார்கள். ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையில், சிலுவைப்பாதை நடைபெறும். மரத்தாலான சிலுவையை சுமந்து பிராத்தனை செய்வார்கள். 

"சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் வழிய தொங்கி கொண்டிருக்கும் போது இயேசு கிறிஸ்து, தன் தந்தையிடம் "தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை" என மக்களுக்காக பரிந்து பேசினார். தன் கடைசி மூச்சு வரை மனிதகுலத்தை அலாதியாக நேசித்தார். தன் உயிரையும் தியாகம் செய்தார். இந்த தியாகத்தை நினைவு கூறும் நாளே "புனித வெள்ளி". 

இதையும் படிங்க: முடி கொத்து கொத்தா கொட்டி போகுதா! தைராய்டு சுரப்பில் கோளாறு.. இந்த 3 விஷயங்களை முதல்ல சரி பண்ணுங்க!!

புனித வெள்ளி நோக்கம் 

புனித வெள்ளி என்ற வார்த்தையை பிற மதத்தினர் தவறாக புரிந்து கொள்ளலாம். இது கொண்டாட்டத்தின் நாள் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இது துக்கத்தினை குறிக்கும் நாள். முழுவதும் மனதில் இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் மனதில் அசை போட்டு, பாவங்களை விட்டும் மனமாறும் நாள். இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் இந்த நாள் 'புனித வெள்ளி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளுக்கு பின் வரும் ஞாயிறு இயேசு உயிர்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

மனமாற்றம் தான் புனித வெள்ளி நாளின் நோக்கம். பாவங்களை விட்டு மனமாறி இயேசுவின் வழியில் வாழ வேண்டும் என்பதை அந்த நாள் வலியுறுத்துகிறது. புனித வெள்ளி என்றால் தவம், கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் புனிதமான நாள். புனித வெள்ளியின் இருளே, அடுத்து புனித ஞாயிரான ஈஸ்டர் அன்று உயிர்த்தெழுதலில் கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. இந்த நாளில் நம் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு மனம் மாறி புதிய வாழ்க்கையை தொடர வேண்டும். 

இதையும் படிங்க: நாளை பங்குனி உத்திரம்! முருகனுக்கு விரதம்.. குலதெய்வ வழிபாடு.. பலன்கள் இவ்வளவா!! எப்படி வழிபட வேண்டும்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios