பிரம்ம முகூர்த்தம் என்பது சூரிய உதயத்திற்கு சுமார் 1 மணி நேரம் 36 நிமிடங்களுக்கு முன் தொடங்கும் மிகவும் சுபமான நேரமாகும். இது யோகா, தியானம், இறை வழிபாடு மற்றும் கல்வி பயில சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் திதி, நட்சத்திர தோஷங்கள் கிடையாது, இது மன அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலைத் தரும் நேரமாக கருதப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபடுவது, தியானம் செய்வது, உடற்பயிற்சி செய்வது என ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் பல பயிற்சிகளை பலரும் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையிலேயே இந்த நேரத்திற்கு சக்தி இருக்கா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.பிரம்ம முகூர்த்தம் (அதிகாலை 3:30 - 5:30) என்பது வெறும் வழிபாட்டு நேரம் மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் 'ரீ-புரோகிராமிங்' செய்யும் ஒரு அற்புதமான காலச்சக்கரம். இதுவரை பொதுவெளியில் பேசப்படாத சில நுட்பமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிரம்ம முகூர்த்தம் அதிசயிக்க வைக்கும் உண்மைகள் :
1. மூளையின் செயல்பாடு :
அறிவியல் ரீதியாக, இந்த நேரத்தில் மனித மூளையின் மையப்பகுதியில் உள்ள பைனியல் சுரப்பி மிகத் தீவிரமாகச் செயல்படும். இதை ஆன்மீகவாதிகள் 'மூன்றாவது கண்' என்கிறார்கள். இந்த நேரத்தில் சுரக்கும் மெலடோனின் ஹார்மோன், மற்ற நேரங்களை விடத் தூய்மையானதாக இருக்கும். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முதுமையைத் தள்ளிப் போடும் வேலையையும் செய்கிறது. இந்த நேரத்தில் விழித்திருப்பவர்கள் நீண்ட காலம் இளமையாகத் தோன்றுவதன் ரகசியம் இது தான்.
2. பிராண சக்தியின் 'நீல நிற' அதிர்வுகள் :

விண்வெளி ஆய்வுகளின்படி, அதிகாலை வேளையில் வளிமண்டலத்தில் ஒருவிதமான நீல நிற மின் காந்த அதிர்வுகள் அதிகமாக இருக்கும். இந்த நீல நிற அதிர்வுகள் மனிதனின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் குணம் கொண்டவை. நாம் இந்த நேரத்தில் தியானம் செய்யும் போது, அந்த நீல நிற ஆற்றல் நமது 'ஆக்ஞா' சக்கரத்தைத் தூண்டி, உள்ளுணர்வை பலப்படுத்துகிறது. எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே உணரும் திறன் பல ஞானிகளுக்குக் கிடைக்க இதுவே காரணம்.இது பிரபஞ்ச ஆற்றலுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நேரம் என்பதால் தான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு அதிக பலனை தரும் என்றும், நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் தன்மை கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.
3. பிளாஸ்மா ஆற்றலும் புவி ஈர்ப்பு மாற்றமும் :
புவி ஈர்ப்பு விசைக்கும் மனித மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிரம்ம முகூர்த்தத்தின் போது பூமியின் சுழற்சி மற்றும் நிலவின் அமைப்பால், புவி ஈர்ப்பு விசையானது ஒருவித 'மென்மையான' நிலையை எட்டும். இந்தச் சூழலில் நமது முதுகெலும்பு நேராக இருக்கும் போது (தியான நிலையில்), பிரபஞ்சத்தில் உள்ள பிளாஸ்மா ஆற்றல் மிக எளிதாக நமது உச்சந்தலை வழியாக உடலுக்குள் பாயும். இது உங்கள் ரத்த ஓட்டத்தைச் சுத்திகரித்து, மூளை செல்களைப் புதுப்பிக்கிறது.
4. 'வாக்கு பலிதம்' எனும் ஒலியியல் ரகசியம் :
அந்த அதிகாலை அமைதியில் காற்றில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் இருக்கும். அந்தச் சூழலில் நாம் உச்சரிக்கும் மந்திரங்களின் 'ஒலி அலைகள்' சிதையாமல் வெகுதூரம் பயணிக்கும். பிரபஞ்சத்தின் 'ஈத்தர்' (Ether) எனப்படும் ஆகாயத் தத்துவத்தில் நாம் வைக்கும் கோரிக்கைகள் இந்த நேரத்தில் மிக வேகமாகப் பதிவாகும். அதனால் தான், இந்த நேரத்தில் எழும் ஒரு நேர்மறை எண்ணம், மற்ற நேரங்களில் செய்யும் 100 பிரார்த்தனைகளுக்குச் சமம் என்று ரகசிய யோக நூல்கள் கூறுகின்றன.
5. பிரபஞ்சப் பெருவெளி கதவு :
சித்தர்களின் கூற்றுப்படி, பிரம்ம முகூர்த்தத்தில் தேவதூதர்கள் மற்றும் சித்த புருஷர்களின் நடமாட்டம் பூமியில் அதிகமாக இருக்கும். அவர்கள் சூட்சும வடிவில் (Astral form) உலவும் அந்த நேரத்தில், நாம் விழித்திருந்து பிரார்திக்கும்போது அவர்களின் ஆசீர்வாதம் மிக எளிதாகக் கிடைக்கும். இன்று பல மேலை நாட்டுப் பெரும் தொழிலதிபர்கள் 'The 5 AM Club' என்ற பெயரில் காலையில் எழுவதைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், நம் முன்னோர்கள் இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "பிரம்ம முகூர்த்தம்" என்ற பெயரில் ஒரு வாழ்வியல் கலையாக மாற்றியுள்ளனர்.
அலாரம் அடிக்கும் போது அதை நிறுத்தி விட்டுத் தூங்குவது என்பது, உங்களைத் தேடி வரும் ஒரு மாபெரும் அதிர்ஷ்டத்தைத் தட்டி விடுவதற்குச் சமம். நாளை முதல் அந்தப் பிரபஞ்ச ஆற்றலை உங்கள் வசமாக்கிக் கொள்ளுங்கள்.


