தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை காப்பாற்றினாரா சூரி? கொட்டுக்காளி படம் விமர்சனம் இதோ!!
Kottukkaali Movie Review : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சூரி. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த கருடன் படமும் மாஸ் ஹிட்டான நிலையில், அவர் அடுத்ததாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தான் கொட்டுக்காளி. இப்படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
கொட்டுக்காளி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை. கலை நயத்தோடு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதையும் வென்றிருக்கிறது. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சி பார்த்த திரையுலக பிரபலங்களும் நெட்டிசன்களும் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Vaazhai Review : மாரி செல்வராஜின் பயோபிக்... வாகை சூடியதா வாழை? விமர்சனம் இதோ
கொட்டுக்காளி படம் பார்த்த மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, கொட்டுக்காளி… குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம்.. முத்தங்கள்டா
வினோத்ராஜ். இப்படியான படைப்பை தயாரித்த சிவகார்த்திகேயன், நடித்த சூரி மற்றும் குழுவினருக்கு கோடி நன்றிகள் என பாராட்டி இருக்கிறார்.
அதேபோல் கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்ற படங்களின் இயக்குனர் இரா.சரவணன், கொட்டுக்காளி பார்த்தேன். உலகத்தரம். அதேநேரம் உள்ளூரிலும் கொண்டாடக்கூடிய படமாக, நெஞ்சென்கிற நியாயத் தராசை ஆட்டிப் பார்க்கும் படைப்பாக சிலிர்க்க வைத்திருக்கிறது. ‘கூழாங்கல்’ என்கிற முதல் படைப்பிலேயே அணுகுண்டை வீசிய தம்பி பி.எஸ்.வினோத் ராஜ், ‘கொட்டுக்காளி’யில் பேசியிருப்பது அதைவிடப் பெரிய அரசியல்.
மக்களின் நாடி பிடித்து படிப்படியாக முன்னேறி கதாநாயகனாகக் கொடி நாட்டியிருக்கும் சூரி அண்ணன், ‘கொட்டுக்காளி’யில் நம்முடைய நாடித் துடிப்பாகவே மாறியிருக்கிறார். ஆண்களுக்குள் இருக்கும் அரக்கனாக, ஆங்காரமாக மாறி இருக்கிறார். கொலைப்பசியோடு அலைந்தவருக்கு தலைவாழை விருந்து என்றால், சொல்லவா வேண்டும். “உங்களின் உச்சம் இது…” எனக் கட்டிக்கொண்டேன் சூரி அண்ணனை.
ஓர் இயக்குநர் என்று மட்டும் குறிப்பிட முடியாது வினோத்தை… ஒரு போரையே நடத்தி முடித்திருக்கிறார். ‘இதுதான் என் படைப்பு’ எனச் சொல்ல தன்னையே உருக்கி உழைத்துச் செதுக்கி இருக்கிறார். நமக்குள் இருக்கும் அரக்கனை அடையாளப்படுத்த எப்பேர்ப்பட்ட உழைப்பு. இரவு இரண்டு மணி வரை தம்பியிடம் பேசிக்கொண்டே இருந்தேன். ஒரு படைப்புக்காக ஒருவர் எந்தளவுக்குத் தன்னை வருத்தி வதைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இயக்குநர்கள் அ.வினோத்தும் பி.எஸ்.வினோத்தும் அற்புதமான முன்னுதாரணங்கள்.
“உங்களை உச்சிமுகந்து ஏற்றுக்கொண்ட சினிமாவுக்கு பதில் நன்றியாக நீங்கள் கொடுத்திருக்கும் பரிசுதான் கொட்டுக்காளி…” எனச் சொன்னேன் தம்பி சிவகார்த்திகேயனிடம். இத்தகைய படைப்புகள் முக்கியத்துவம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் தம்பி சிவகார்த்திகேயன் இதைத் தயாரித்து இருக்கிறார். உண்மையில் இந்தப் படைப்பு சிவாவின் முக்கியத்துவத்தை அதிகமாக்கி இருக்கிறது என்பதே உண்மை.
நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும், கண்ணைவிட்டு மாறாத மறையாத களத்துக்கும், அத்தனையுமாய் மாறி பேயாட்டம் ஆடும் வினோத்துக்கும், கதைக்காகச் சதையறுத்துத் தொங்கவிடவும் துணிந்திருக்கும் அண்ணன் சூரிக்கும், தரமான தங்கமான படைப்பைக் கடைகோடி வரை கொண்டுபோய்ச் சேர்க்கும் தம்பி சிவகார்த்திகேயனுக்கும் ஆயிரம் முத்தங்கள்! கொட்டுக்காளி, உலகளாவிய உக்கிர படைப்பு என சிலாகித்து பதிவிட்டுள்ளார்.
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், கொட்டுக்காளி அற்புதமாக செதுக்கப்பட்ட படம். இது தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய மறக்க முடியாத படைப்பை கொடுத்த குழுவினருக்கு நன்றி என பாராட்டி இருக்கிறார்.
மற்றொருவர் போட்டுள்ள பதிவில், இந்தப் படம் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்பதை விவரிக்க 280 எழுத்துக்கள் பத்தாது. இது வழக்கமான படமல்ல, மெதுவான படம் தான் ஒரு வெளிப்படையான முடிவு இருக்கிறது. இப்படம் அனைவரையும் யோசிக்க வைக்கும். இதுதான் இந்த ஆண்டின் சிறந்த படம் என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னவன் இவன்... லவ் மேரேஜுக்கு ரெடியான மேகா ஆகாஷ்; சைலண்டாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்