மண்டல குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு பதவி இடங்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை  நாளை வெளியிடுகிறது. 

அதிருப்தியில் கூட்டணி கட்சி ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 99 சதவிகித இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதனையடுத்து நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துனை தலைவர் பதவியிடங்களை கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைமை ஒதுக்கியது. ஆனால் இதில் பெரும்பாலான இடங்களில் திமுகவினரே கைப்பற்றி வெற்றி பெற்றனர். இதன் காராணமாக அதிர்ச்சி அடைந்த கூட்டணி கட்சியினர் திமுக தலைமையிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இருந்த போதும் தலைமையின் உத்தரவை மதிக்காமல் ஒரு சில மாவட்டங்களில் நிர்வாகிகள் பதவி விலகாமல் இருந்தனர். இதனால் கூட்டணி கட்சியினரிடம் மன வருத்தம் ஏற்பட்டது. 
இந்தநிலையில் திமுகவிற்கு அடுத்த பிரச்சனை மண்டல குழு தலைவர் பதவி மூலம் ஏற்பட்டுள்ளது. 

மண்டல குழு தலைவர் தேர்தல்

 இந்த நிலையில் நிலைக்குழு தலைவர், வார்டு குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற 30 ஆம் தேதி 21 மாநகராட்சியில் உள்ள வார்டு குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 31 ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு, நியமனக் குழு உறுப்பினர்கள், மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி மதியம் 21 மாநகராட்சிக்கான நிலைக்குழு தலைவர்கள், கணக்குக்குழுத் தலைவர், பொது சுகாதார குழு தலைவர், கல்விக்குழு தலைவர், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர், நகரமைப்பு குழு தலைவர், மற்றும் பணிகள் குழு தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

கூட்டணி கட்சிக்கு நோ ?

இந்த நிலையில் தான் தங்களுக்கு மண்டல குழு தலைவர் பதவி வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுகவினரே கைப்பற்றியுள்ளதால் மண்டலக்குழு தலைவர் மற்றும் பல்வேறு குழு தலைவர்கள் பதவி இடங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சென்னையில் ஒரு மண்டல குழு பதவியையாவது வழங்குமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதே போல விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள பதவி இடங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் கீழ் மட்ட தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை நோ சொல்லி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் கூட்டணி கட்சிகளுக்கு மண்டல குழு தலைவர் பதவி இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முடிவு நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.