பாஜக கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்திய நாராயணா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மத்திய பாஜக அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியால் பாஜகவுடனான தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியை முறித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தங்கள் கட்சியை சேர்ந்த இருவரை ராஜினாமா செய்ய வைத்தார். 

பாஜக உடனான கூட்டணியை முறித்தபிறகு பாஜகவையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசையும் சந்திரபாபு நாயுடு விமர்சித்து வருகிறார். 

காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்றாக தேசிய அளவில் பிராந்திய கட்சிகளை இணைத்து மூன்றாவது கூட்டணியை உருவாக்க தீவிரம் காட்டும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நட்பு பாராட்டிவருகிறார். அதனால் மூன்றாவது அணி உருவானால் அதில் தெலுங்கு தேசம் கட்சியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகினாலும், பாஜக தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சத்தியநாராயணா குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய நாராயணா, முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அமைச்சர்களும் எதிர்க்கட்சி தலைவர் ஜகன்மோகன் ரெட்டியை விமர்சிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காமல் மாநில நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை விமர்சிக்காமல் மௌனம் காக்கின்றனர். ஏனென்றால், பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகும் பாஜக தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் என சத்தியநாராயணா குற்றம்சாட்டியுள்ளார். 

சத்தியநாராயணாவின் இந்த பேச்சு, ஆந்திராவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.