கிருஷ்ணகிரி அருகே இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வெறி கும்பலால் பட்டப் பகலில் நடு ரோட்டில் இந்த கொரூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை யாரும் காப்பாற்ற முன்வராததால் சாலையிலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு மாறாக, மனிதாபிமானம் இன்றி அங்கிருந்தவர்கள்  அவரை வீடியோ எடுப்பதில் ஆர்வம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கிருந்த போலீசாரும் பொது மக்களுடன் நின்று  வேடிக்கை பார்த்துள்ள சம்பவம், காவல் துறை மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஓட்டு மொத்த தமிழகத்தையும் நிலை குலைய வைத்துள்ளது. மக்கள் உயிருக்கு அஞ்சி வெளியில் தலை காட்டுவதை தவிர்த்து வருகின்றனர். தொடர் ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் குற்றச்சம்பங்கள் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை. சில சமூக விரோத கும்பல்கள் கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,  கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களை கனகட்சிதமாக அரங்கேற்றி வருகின்றன. இந்தவகையில்தான் கிருஷ்ணகிரியில் இந்த கொலைச் சம்பவமும் அரங்கேறி உள்ளது.   
 
கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் வாஞ்சி என்கிற சதீஷ்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையம் பின்புறம் உள்ள துறிஞ்சிபட்டி பகுதியில் வாஞ்சி மற்றும் அவரது நண்பர்கள் பவுன்ராஜை பட்டப்பகலில் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர். 

பின்னர் அப்பகுதி மக்கள் வருவதை கண்ட அந்த கொலை வெறி கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பவுன்ராஜை யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்வரவில்லை. ஆனால் அவர் துடித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டினர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை காப்பாற்றாமல் அங்கிருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் போலீசாரும் அங்கு கைக்கட்டி வேடிக்கை பார்த்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.