மதுரை அணைக்கரைப்பட்டி இளைஞர் ரமேஷ் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.ஜெய்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர் புதிய ராஜா என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஓ ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம். பேரையூர் அருகே இருக்கும் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ரமேஷ் என்ற இளைஞர், 2 நாட்களுக்கு முன்னர் சாப்டூர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ரமேஷின் அண்ணன், புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, வெகு நேரம் ஆகியும் ரமேஷ் வீடு திரும்பாத நிலையில் அவர் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவலர்கள் தான் ரமேஷை கொலை செய்து விட்டார்கள் என குற்றம் சாட்டிய அக்கிராம மக்கள் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2 நாளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய ஆர்.டி.ஓ ராஜ்குமார், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தவிருப்பதாகவும் கூறினார். இதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவந்த பொதுமக்கள் தற்காலிகமாக போரட்டத்தை வாபஸ் பெற்றனர்.