காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ள நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், மத்திய  மாநில அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிடமிருந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

பதினோறாவது ஐ.பி.எல் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர் சென்னை அணி களமிறங்கவுள்ளதால், ரசிகர்கள் இடையே இப்போட்டித் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் பல விதங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், இந்த விசயத்தில் ஒரு வித்தியாசமான யோசனை தெரிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவர் கூறியிருப்பதாவது...நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது.

அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும், சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல், ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.
ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்த தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.

இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிட வேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை.
இது தமிழர்களின் பிரச்னை என்று தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சிந்திப்போம் தோழர்களே.விவசாயத்தை மட்டுமல்ல நாட்டையும், தன்மானத்தையும், எதிர்காலத்தையும் காப்போம் என கூறியுள்ளார்.

அதேபோல தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “வாழ்க்கையின் மேன்மை கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றால்தான் வெளிப்படுகிறது.இதில் கலையும் இலக்கியமும் மனித உள்ளத்திற்கானவை; ஆனால் விளையாட்டு உடல், உள்ளம் இரண்டுக்குமே நலம் சேர்ப்பது. அதேநேரம் இம்மூன்றுக்குமே முன்நிபந்தனை பொருளியல் வாழ்வு!வாழ்வின் அடிப்படை தேவைகள் பறிக்கப்படும், அழிக்கப்படும் நிலையே உருவாக்கப்படுகிறது தமிழ்நிலத்தில்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலேயே நான்கு ஆண்டுகளைக் கடத்தி, இப்போது தான் விரும்பியபடி சட்டத்திற்குப் புறம்பான ஓரம்சாய்ந்த ஓர் தீர்ப்பைத் தயாரித்து மேலாண்மை வாரியத்தையே மத்திய அரசு காலி செய்திருக்கிறது என்றும் அதனால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியால் இந்தப் போராட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் “10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது இன்றைய காலத்தில் ஒப்பீட்டளவில் சினிமாவும் கிரிக்கெட்டும்தான் ஆற்றல்மிகு ஊடகங்களாக உள்ளன.அதிலும் கிரிக்கெட் பேராற்றலுடையது!

அப்படியிருக்க, ஆட்சியாளர்கள் போராட்டங்களின்பால் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பேராற்றலுடைய கிரிக்கெட் ஊடகத்தினைப் பயன்படுத்திக்கொள்ளாமல் எப்படி?எனவேதான் அத்தகைய சூழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும் இரையாகிவிடக் கூடாது என்று எண்ணுகிறோம்.
ஆகையால் வரும் 10.04.2018 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இல்லை என்கிறபடிதான் தங்களின் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்படும் என்று நம்புகிறோம்.

தப்பித் தவறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு 10.04.2018 தேதியைத் தேர்வு செய்திருந்தால், தயைகூர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமும் ஐபிஎல் நிர்வாகமும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, அதனை வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஆவன செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை கிரிக்கெட் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படவில்லை என்றால், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியைப் புறக்கணித்து மைதானத்தின் இருக்கைகள் முழுவதும் வெறிச்சோடியிருக்கச் செய்ய வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதேபோல், ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று . தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனும் வலியுறுத்தியுள்ளார்.