young man wrote letter to makkal needhi maiam leader kamal hassan
அதிகார மட்டத்தின் ஒவ்வொரு செங்கலும் ஊழலில் ஊறிப்போய் உள்ளது.
அந்த அதிகார மட்டத்தை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டிய நீங்களோ..?
கிராமசபை நாடகம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்ட கிளம்பி விட்டீர்கள்.
மாற வேண்டியது மக்கள் மட்டுமல்ல நீங்களும்தான் என்ற தொனியில் கடிதம் ஒன்றை கமலுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், ஐயா கமலுக்கு, ஒரு அன்பனின் மனம் திறந்த மடல்.. இல்ல கடிதம்.. சரி லெட்டர்னே வைச்சுக்கலாம்.
இங்கு நாங்கள் நலம். அங்கு நீங்கள் நலம் என்று நம்புகிறோம்.
(ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டு கடிதம் எழுதுனாலும், இப்டித்தான் எழுதணுங்கிறது முறை).
சரி.. காலத்தின் அருமைகருதி நேராவே விசயத்துக்கு வர்றேன்.
கிராம சபைக் கூட்டம் என்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படியே கூட்டப்படும் கூட்டம்.
தாங்கள் கூட்டிய மாதிரி கிராமசபை கூட்டத்தின் வாயிலாக பல கோடி மக்களுக்கு அந்த செய்தி போய் சேர்ந்திருக்கும்.
ஆனாலும், நீங்கள் கூட்டிய மாதிரி கிராமசபைக் கூட்டத்தை ஊடகங்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லையே என்ற வருத்தம் உங்களைப் போலவே.. எங்களுக்கும் உண்டு.
நீங்கள்தான் ஊடகங்களை நம்பாமல் யூடியூப்பில் நேரலை பேட்டி கொடுப்பவர் ஆச்சே. அதனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.

சரி.. கிராமசபைக் கூட்டத்தில் சாதி, மத வேறுபாடின்றி சமமாக உட்கார வேண்டும் என்று பிக்பாஸ் பரணி மூலம் நடித்துக் காட்டினீர்கள். பதவி கிடைத்தும் நாற்காலியில் உட்கார முடியாமல் உயிரிழந்த மேலவளவு முருகேசன், ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியாது என்று சொன்னதால் புறக்கணிக்கப்பட்ட தெற்குசிலுக்கன்பட்டி வீரபத்திரன் எங்கள் நினைவில் வந்து விட்டுப் போனார்கள்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் கிராம பஞ்சாயத்துகள் எல்லாம் இந்திய அரசாங்கத்தின் அவமான சின்னங்கள் என்பதை ஊடகங்கள் மூலமாகவோ, அர்ஜுன், ரகுவரன், நாசர் நடித்த திரைப்படங்கள் மூலமாக நீங்கள் அறிந்திருக்கலாம்.
கயத்தார் ஒன்றியப் பெருந்தலைவி கையெழுத்துப் போடவும், கரிசல்காட்டில் களை பறிக்கவும் மட்டுமே பத்தாண்டுகள் பதவியில் இருந்ததை ஆங்கில ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. உங்களைச் சுற்றி அறிவுஜீவிகள் இதனை அறிந்திருக்கலாம்.
கிராம சபைத் தீர்மானங்களுக்கு பார்லிமெண்டே பதில் சொல்ல வேண்டும் என்று மாதிரி கிராம சபையில் ஐயா கமல் பேசும் போது ரத்தம் சூடேறி, நாடி, நரம்புகள் எல்லாம் முறுக்கேறின.ஆனால், நடைமுறையில் அப்படியெல்லாம் இல்லை ஐயா.
ஸ்டெர்லைட் வேண்டாம் என்று தெற்கு வீரபாண்டியபுரம் கிராம சபைத் தீர்மானம், அணுஉலை வேண்டாம் என்று கூடன்குளம் கிராமசபை தீர்மானம், மீத்தேன் வேண்டாம் என்று கதிராமங்கலம் கிராமசபை தீர்மானம், நியூட்ரினோ வேண்டாம் என்று பொட்டிபுரம் கிராமசபை தீர்மானம், நிலத்தடிநீர் உறிஞ்சக்கூடாதென்று புதியம்புத்தூர்

கிராமசபை தீர்மானம், மதுக்கடை வேண்டாமென்று கலிங்கப்பட்டி கிராமசபை தீர்மானம், மணல் குவாரி வேண்டாமென விருசம்பட்டி கிராமசபை தீர்மானம், தெருவிளக்கு, குடியிருக்க வீடு, நல்ல குடிநீர், சாலை, போக்குவரத்து, சாக்கடை வசதி, குப்பைத்தொட்டி, கல்வி, சுகாதார வசதி, முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, இப்படி எண்ணற்ற கோரிக்கைகளை முன் வைக்கும் கிராமசபை தீர்மானங்கள் எதுவுமே கண்டுகொள்ளப்படவில்லை ஐயா.
கேரளா பிளாச்சிமடா கிராமசபைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அதற்குப் பிறகு எந்த கிராமசபை தீர்மானத்தையும் மதிக்கவில்லை ஐயா.
ஆண்டுக்கு நான்கு முறை, அரசுக்கு தேவைப்பட்டால் கூடுதலாக ஒருமுறை சடங்குகள் போல நடத்தப்படுகிறது கிராமசபை.
கேமராக்கள் முன்னால் நீங்கள் நடத்தியதைப் போல.
அரசுத் திட்டங்களுக்கு அரசியல்வாதிகளால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்புதல் பெறவும், பிடிஓ எழுதிக் கொடுத்த தீர்மானத்தில் கையெழுத்து வாங்கவும் மட்டுமே கிராமசபை கூடுகிறது. தங்கள் ரசிகர்களே, தொண்டர்களாக இருப்பது போல,இப்போதெல்லாம் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகளே கிராமசபை கூட்டத்தின் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.
நீங்கள் நடத்திய மாதிரி கிராமசபை கூட்டத்தில் கூட விரல் விட்டு எண்ணும் அளவிற்கே பெண்கள் இருந்தார்கள். பரவாயில்லை எங்கள் கிராமசபைகளில் பஞ்சாயத்து தலைவியின் கணவர்தான் கூட்டத்தையே நடத்துவார். பேங்க் மேனேஜர் முன்பே தலைவியின் கையெழுத்தை தானே போட்டு செக்கை பாஸ் செய்ய வைக்கும் கணவன்மார்கள் ஆதிக்கம் நிறைந்தது இந்த கிராம ராஜ்ஜியம்.தங்களின் மாதிரி கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு கூட வாசித்தார்கள்.
பஞ்சாயத்திற்கான மாநில அரசின் நிதியையும், மத்திய அரசின் நிதியையும் முடக்கி பல ஆண்டுகள் ஆகிறது தெரியுமா..? இப்போது கூட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளாட்சி நிதியை கொடுக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததே.. உங்கள் உடன் இருப்பவர்கள் கூட படிக்கவில்லையா..?
தெருக்குழாயை பராமரிக்க கூட எங்கள் பஞ்சாயத்தில் நிதி இல்லை என்று தான் பதில் வருகிறது.வரி வருவாய் வருகின்ற பஞ்சாயத்தே இல்லையா என்று தங்கள் ஆதங்கம் கேட்கிறது.

சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புத்தூர், காஞ்சிபுரம் என்று உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதத்தில் படுகொலை என செய்தி வருமே.. அங்கெல்லாம் வருமானம் கிடைக்கும். தவறுகள் நடக்கும். மோதல் சாதல் தொடரும்.
வரும்படி கண்டு ஸ்கார்பியோ கார் வைத்திருக்கும் பஞ்சாயத்து தலைவர்கள் வெகுசிலர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல நகரப் பேருந்தை நாடும் பஞ்சாயத்து தலைவர்கள் மிகப் பலர்.
யூனியன் பிடிஓ சொல்வதையும், யூனியன் இன்ஜினியர் சொல்வதையும் கேட்டு நடந்தால் பஞ்சாயத்துக்கு நிதி கிடைக்கும். அதில் கமிசனும் கிடைக்கும்.
எதிர்த்து கேள்வி கேட்டால் பசுமை வீடு மட்டுமல்ல தெருவிளக்கு கூட கிடைக்காது.
அதிகார மட்டத்தின் ஒவ்வொரு செங்கலும் ஊழலில் ஊறிப்போய் உள்ளது.அந்த அதிகார மட்டத்தை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டிய நீங்களோ..?
கிராமசபை நாடகம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்ட கிளம்பி விட்டீர்கள்.மாற வேண்டியது மக்கள் மட்டுமல்ல.நன்றியுடன்...
தங்களைப் போலவே ஜனநாயகத்தை காக்கத் துடிக்கும் மக்களில் ஒருவன்.
நன்றி - கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
