சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. 

இக்காலக்கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. இந்நிலையினை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வறுமையான நிலையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் வகையில், தகுதிகளின் அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று 2.7.2020 அன்று அறிவித்தார்கள். 

அதன்படி, சட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்கள் பயன்பெறும் வகையில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை,  முதலமைச்சர் அவர்கள் இன்று 9 இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கி, துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  அமைச்சர்கள்சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.