மரியாதையாக பேசும்மா என  காதலன் தனது காதலியை கண்டித்ததால்,  பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் லட்சுமி நகர் 2வது தெருவைச் சேர்ந்த பர்வீன் பாபி, திருப்பூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், திருப்பூர் அங்காளபரமேஸ்வரி நகரில் ஒரு வாடகை வீட்டில் தன் தாயாருடன் தங்கியிருந்தார். திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில், பர்வீன் பாபியுடன் காவலராகப் பணியாற்றுபவர் யூசுப் ஷெரிப்ம் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். யூசுப் ஷெரிப் குடும்பத்தினர் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு இருவரது காதலை ஏற்றுக்கொண்டனர்.

ரம்ஜான் நோன்பிற்குப் பிறகு கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். திருமணப் பேச்சு முடிவானதால், அன்றாடம் காலையில் வேலைக்குப் போகும்போதும், மாலையில் வேலை முடிந்து திரும்பும்போதும் பர்வீன் பாபியைத் தன்னுடைய பைக்கில் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் யூசுப் ஷெரிப்.  

சக காவலர்களுடன் இருக்கும் போதும், உயர் அதிகாரிகளுடன் இருக்கும்போதும், “வாடா போடா...” என்று யூசுப்ஷெரிப்பை பர்வீன் பாபி ஒருமையில் அழைத்து வந்துள்ளார். இது அவர்களுக்குள் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பல்லடத்தில் இருந்து பணியை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தார் பர்வீன் பாபி. அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார் காதலர் யூசுப் ஷெரிப். வீட்டிலிருந்த பர்வின் பாபியின் தாயார் மாபூநிஷாவிடம் “உங்க பொண்ணு என்னை மற்றவர்கள் முன்னிலையில் மரியாதைக் குறைவாக வாடா போடா என்று பேசுகிறார். அவரை மரியாதையாகப் பேசக் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால், அங்கு வந்த பர்வீன் பாபிக்கும் யூசுப்ஷெரிப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பர்வின் பாபியின் தாயார் மாபூநிஷாவும் யூசுப் ஷெரிப்புக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதையடுத்து, தாயார் மற்றும் காதலன் இருவருடனும் பர்வின்பாபி சண்டை போட்டுள்ளார். இதனால் வெறுப்படைந்த காதலன் அங்கிருந்து கோபத்துடன் பைக்கில் கிளம்பிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், காதலி பலமுறை தன்னுடைய செல்போனில் இருந்து யூசுப் ஷெரிப்பைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் செல்போனை எடுக்கவில்லை. காதலன் கோபித்துக்கொண்டு போனதால் மனவேதனை அடைந்த காதலி, வீட்டிலிருந்த எலி மருந்தைத் தண்ணீரில் கரைத்துக் குடித்துள்ளார். படுக்கை அறையில் டம்ளர் கீழே விழும் சத்தம் கேட்டு அவரது அம்மா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மகள் மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மகளை மீட்டு  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பர்வீன் பாபியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.