இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்த போதே, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தபால் ஊழியராக மத்திய அரசு வேளையில் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நகராட்சி ஊழியர் சுமதியின் மகள் பிரீத்தி, 4 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட சுமதி தான் பிரீத்தியை வளர்த்து வந்தார்.

கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த பிரீத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் தபால் ஊழியர்களுக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றதால், தபால் ஊழியராக தாமரைக்குளம் அடுத்த எடகீழையூரில் வேலைக்கு சேர்ந்தார்.

கடந்த 20 நாட்களாக தனது தாத்தா தங்கையன் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்த நிலையில், 2 தினங்களுக்கு முன கோவைக்கு சென்று கல்லூரி நண்பர்களை சந்தித்து திரும்பிய பிரீத்தி, திங்கட்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ப்ரீத்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய பிரீத்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரீத்தி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மன்னார்குடி போலீசார் விசாரித்தபோது, பிரீத்தி கல்லூரியில் படித்தபோது அவரை மாணவர் ஒருவர் காதலித்ததாகவும், தபால் ஊழியராக வேலை கிடைத்த பின்னர் பிரீத்தியால் முன்புபோல் பேச நேரம் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கோவை சென்ற பிரீத்தி தனது காதலன் சொன்ன இடத்தில் ரூம் எடுத்து தங்காமல், தனியாக ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் பிரீத்தியின் நடவடிக்கை குறித்து காதலனுக்கு சந்தேகம் ஏற்படவே,. பிரீத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக அசிங்க அசிங்கமாக வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி திட்டியுள்ளார். இந்தநாள் நொந்து போன பிரீத்தி இந்த சோக முடிவை தேடிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, தங்களது பூர்வீக சொத்தை தனது தாய் விற்க முயன்றதால் பிரீத்திக்கு அதிருப்தியை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. நம்மை இந்த உலகில் யாரும் புரிந்து கொள்ள வில்லையே ? என்ற விரக்தியில் பிரீத்தி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.